சென்னை: தமிழகத்தில் இதுவரை எந்தப் பகுதியில் சொத்து வாங்கப்படுகிறதோ, அந்தப் பகுதியைச் சேர்ந்த சார்பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்றுதான் பத்திரப்பதிவு செய்ய வேண்டும். இந்த நடைமுறையை மாற்றி, ஒரு பதிவு மாவட்டத்துக்குள் பொதுமக்கள் தங்களுக்கு வசதியான மாதிரி பதிவு மையத்தில் ஆவணங்களைப் பதிவு செய்யும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் முதற்கட்டமாக வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் வடக்கு ஆகிய 5 பதிவு மாவட்டங்களில் மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இதன் செயல்பாடுகள் மதிப்பீடு செய்யப்பட்ட பிறகு மேலும் 20 இடங்களுக்கு விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மையங்களை அமைத்து, இயக்கி பராமரிக்கும் பணிகள் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். ஒப்பந்தக் காலம் 5 ஆண்டுகள் ஆகும். இந்த மையங்களில் வழக்கமான சேவைக்கு ரூ.2,000, அவசர வழக்கமான சேவைக்கு ரூ.5,000, சிறப்பு சேவைக்கு ரூ.5,000, அவசர சிறப்பு சேவைக்கு ரூ.10,000 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்துடன் வழக்கமான முத்திரைத்தாள் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணங்களையும் செலுத்த வேண்டும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


