சென்னை: சென்னை மாநகரின் காற்று மாசுபாடு குறைந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் நகரத்தின் காற்று தரக்குறியீடு 34% குறைந்துள்ளதாக ஒரு தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் இயங்கும் ஒரு தனியார் ஆய்வு மற்றும் ஆலோசனை மையமான கிளைமேட் ட்ரெண்ட்ஸ் ஆய்வு நிறுவனம் சமீபத்தில் சென்னை மாநகரின் காற்றுமாசு குறித்து ஆய்வு நடத்தியது. அதில் காலநிலை மாற்றம் மற்றும் நிலையான வளர்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளில் சென்னை மாநகரின் காற்று தரக்குறியீடு மேம்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த 2015ம் ஆண்டில் காற்றின் தரக்குறியீடு 114ஆக இருந்தது. 2025ல் அது 75 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டுக்கு பிறகு குறிப்பிட்ட முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை காட்டுகிறது. அதாவது 68 முதல் 75 வரை உயர்ந்துள்ளதையும் காட்டுகிறது. இந்த ஆய்வில் ஈடுபட்ட ஆய்வாளர்கள் காற்று தரக்குறியீட்டின் வீழ்ச்சிக்கான காரணங்களை பட்டியலிடவில்லை. ஆனால் காற்று தரக்குறியீடு பூஜ்ஜியம் முதல் 50 வரை உயர்வதற்கான வரம்பை எட்டுவதற்கு நாம் இன்னும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கிறது.
பெருநகரங்கள் உள்பட 11 இந்திய நகரங்களின் காற்று தரக்குறியீட்டு தரவுகளை பொருத்தவரையில் சுற்றுப்புற காற்று தரக்கண்காணிப்பு நிலையங்கள் மூலமாக தொடர்ச்சியாக கண்காணிப்பட்டதாகவும் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்னையில் இதுபோன்ற கண்காணிப்பு நிலையங்கள் 8 உள்ளன. கடந்த 2015 மற்றும் 2025க்கும் இடையிலான பதிவு செய்யப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 2021ல் காற்று தரக்குறியீடு 66.21 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஒரு சிறந்த அளவு என்பதையும் காட்டுகிறது. 2020க்குப் பிறகு காற்றில் மாசு உமிழ்வதை குறைப்பதற்கான நடவடிக்கைகள் சாதாரண நாட்களில் மேற்கொள்ளப்பட்டது. தீபாவளி பண்டிகை போன்றவை இதில் சேராது.
அதன் மூலம் காற்று மாசுபாடு குறைந்துள்ளது என்று தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுதவிர பல துறைகளை சேர்ந்த பாரம்பரிய எண்ணெய் ஆலைகள் பெரும்பாலும் உயர் தூய்மையான சூழ்நிலைக்கு மாற்றப்பட்டன. சென்னை மாநகரில் எல்பிஜி மற்றும் சிஎன்ஜி வாகனங்கள் அதிகரித்துள்ள நிலையில், அதிக அளவில் மாசு ஏற்படுத்தும் சாலைகளில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்புடன் இயந்திர மாசு மற்றும் தூசு நீக்கிகள் மூலம் தொடர்ந்து அகற்றப்படுகின்றன. அவை ஒன்றிணைந்து காற்று தரக்குறியீட்டை மேம்படுத்த உதவியுள்ளன என்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆய்வு அறிக்கையின்படி, 2025ம் ஆண்டில் காற்று தரக்குறியீட்டை 3 இலக்கங்களில் பதிவு செய்துள்ள டெல்லி, விசாகப்பட்டினம் மற்றும் அகமதாபாத்துடன் ஒப்பிடும் போது சென்னை நகரம் மிகவும் சிறப்பாக உள்ளது. இந்த ஆய்வில் பெறப்பட்ட விவரங்கள் எதார்த்தத்தை பிரதிபலிக்காமல் இருக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கி்ன்றனர். இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களின் அளவுத் திருத்தமும் கேள்விக்குறியாக இருக்கிறது. அவை எவ்வளவு துல்லியமானவை என்பதற்கான வெளிப்படைத் தன்மை அல்லது பதிவுகள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். இருப்பினும் சென்னை மாநகரின் காற்று தரக்குறியீடு உயர்ந்து வருவது பெரும் ஆறுதலை தருகிறது. டெல்லி, விசாகப்பட்டினம் மற்றும் அகமதாபாத்துடன் ஒப்பிடும் போது சென்னை நகரம் மிகவும் சிறப்பாக உள்ளது.


