Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னையில் 10 மற்றும் 11ம் தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்: 4,079 வாக்குச்சாவடிகளில் நடக்கிறது

சென்னை: சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, சென்னை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் 19ம்தேதி வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் பெறும் காலம் கடந்த 19ம் தேதி முதல் முதல் வரும் 18ம் தேதி வரை நடைபெறுகிறது.

ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் காலத்தில், தகுதியுள்ள குடிமக்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக, அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் கடந்த 27, 28ம் தேதிகளிலும், ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து, நாளை (10ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் (11ம் தேதி) ஆகிய 2 நாட்களிலும் சென்னை மாவட்டத்தில் உள்ள 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது.

ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் காலத்தில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத குடிமக்கள் மற்றும் 18 வயது நிரம்பிய தகுதியுடைய குடிமக்கள் படிவம்-6ஐ உறுதி மொழி படிவத்துடன் சமர்ப்பித்து தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம். மேலும், ஒரு சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள எந்தவொரு வாக்காளரும், முன்மொழியப்பட்ட சேர்க்கைக்கு ஆட்சேபனை தெரிவிக்கவோ அல்லது ஏற்கனவே உள்ள பெயரை நீக்க கோரவோ படிவம்-7 மூலம் விண்ணப்பிக்கலாம்.

முகவரி மாற்றுதல், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்ய, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மாற்றம் செய்ய, மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என குறிப்பது ஆகிய கோரிக்கை உடையவர்கள் படிவம்-8 மூலம் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.