மளமளவென எகிறிய தங்கம் விலை.. இரண்டே நாளில் சவரனுக்கு ரூ.2,160 உயர்வு: ஒரு கிராம் மீண்டும் 9,000ஐ தாண்டியது!!
இந்த ஆண்டின் தொடக்கம் முதலே வெகுவாக அதிகரித்து வரும் தங்கம் விலை கடந்த ஏப்ரல் மாத கடைசியில் அட்சய திருதியை நாள் கொண்டாட்டப்பட்டதால் அதுவரை உச்சத்தில் இருந்த தங்கம் விலை, அதற்கு அடுத்த நாட்களில் சற்று குறையத் தொடங்கியது. கடந்த 4 நாட்களும் தங்கம் விலை எந்த மாற்றமும் இல்லாமல் இருந்ததால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை (மே 2ம் தேதி) தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.8,755க்கும் சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.70,040க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாட்களும் அதே விலையே விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் ஆபரணத்தங்கம் விலை நேற்றும் இன்றும் சவரனுக்கு ரூ.2,160 உயர்ந்துள்ளது. தங்கம் விலை நேற்று காலை சவரனுக்கு ரூ.160, மலையில் ரூ.1,000 உயர்ந்த நிலையில் இன்று ரூ.1,000 உயர்ந்துள்ளது. இதையடுத்து சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,000 உயர்ந்து ரூ.72,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.125 உயர்ந்து ரூ.9,025க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் மீண்டும் ரூ.9 ஆயிரத்தை தாண்டியது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.111க்கு விற்பனை செய்யப்படுகிறது.