சென்னை புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை: சாலைகளில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதி!
சென்னை: சென்னை புறநகர்ப் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயல், பூந்தமல்லி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக, இந்தப் பகுதிகளில் உள்ள பல சாலைகள் குண்டும் குழியுமாகக் காட்சியளிப்பதால், மழைநீர் பள்ளங்களில் தேங்கி நிற்கிறது. இதனால் சாலைகளில் உள்ள பள்ளங்கள் தெரியாமல் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
அதேபோல், அம்பத்தூர் - அயப்பாக்கம் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதில் சாலையில் உள்ள மேடு பள்ளங்கள் தெரியாததால், இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி வாகனங்களை இயக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டி ஒருவர், தேங்கிய மழைநீரில் தனது செல்போனைத் தவறவிட்டு சிரமத்திற்கு உள்ளானார்.
இதற்கிடையே, திருவேற்காடு பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாகக் கனமழை பெய்துள்ளது. இதனால் அப்பகுதியில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது, மழைநீரில் தவறவிட்ட செல்போனைத் தேடி எடுத்த வாகன ஓட்டி ஒருவர், மீண்டும் தனது இருசக்கர வாகனத்தை இயக்கிச் சென்ற காட்சிகளும் காண முடிந்தது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பிரதான சாலைகள் மட்டுமின்றி உட்புறச் சாலைகளிலும் மழைநீர் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பல சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாகக் காணப்படும் நிலையில், கனமழையால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சேதமடைந்த சாலைகளைச் சீரமைத்து, மழைநீர் தேங்காமல் வெளியேறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


