பல இளைஞர்கள் கனவுகளைக் காண்கிறார்கள். ஆனால் சிலர் மட்டுமே அந்தக் கனவுகளை நிஜமாக்கும் அளவுக்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் சென்னை மாணவி நிஷா சசிகுமார். வெறும் 16 வயதிலேயே உலகின் மிக உயரமான மலையான எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து, இந்தியாவின் இளம் மலையேற்ற வீராங்கனைகளில் ஒருவராக கவனம் ஈர்த்துள்ளார்.
இந்த சாதனை ஒரே நாளில் நிகழ்ந்ததல்ல. உலகின் ஏழு கண்டங்களிலும் உள்ள உயரமான மலைச் சிகரங்களை அடைய வேண்டும் என்ற இலக்குடன் நிஷாவும் அவரது தந்தை சசிகுமாரும் பல ஆண்டுகளாக திட்டமிட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அந்தப் பயணத்தின் முக்கிய மைல்கல்லாக எவரெஸ்ட் சிகர ஏற்றம் அமைந்துள்ளது.
உலகின் உச்சியை அடைவதற்கு முன்பாகவே பல நாடுகளில் உள்ள உயரமான மலைகளை வெற்றிகரமாக கடந்த அனுபவம் நிஷாவுக்கு இருந்தது. ஆப்பிரிக்காவின் கிளிமஞ்சாரோ, ரஷ்யாவின் எல்புரூஸ், ஆஸ்திரேலியாவின் கோசியஸ்கோ, இந்தோனேஷியாவின் கார்ஸ்டன்ஸ் பிரமிட் மற்றும் தென் அமெரிக்காவின் அகன்காகுவா போன்ற புகழ்பெற்ற சிகரங்களில் ஏறி தனது திறனை நிரூபித்திருந்தார்.
எவரெஸ்ட் ஏற்றம் மிகவும் கடினமான சவாலாக இருப்பதால், அதற்கான தயாரிப்பும் தீவிரமாக இருந்தது. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மலைப்பகுதிகளில் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டார். கல்வியும் பாதிக்கப்படக்கூடாது என்பதால் வார நாட்களில் பள்ளிக்குச் சென்று, வார இறுதிகளில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டார். படிப்புக்கும் கனவுக்கும் இடையே சமநிலையை உருவாக்கிய இந்த ஒழுக்கமே அவரது வெற்றிக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தது.
எவரெஸ்ட் சிகரத்தை அடைந்ததன் மூலம் தனிப்பட்ட சாதனையை மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் உள்ள பெண் குழந்தைகளுக்கு ஒரு ஊக்கச் செய்தியையும் நிஷா வழங்கியுள்ளார். வயது குறைவாக இருந்தாலும் பெரிய இலக்குகளை நோக்கிப் பயணிக்க முடியும் என்பதையும், விடாமுயற்சி இருந்தால் எந்த உயரத்தையும் எட்ட முடியும் என்பதையும் அவரது சாதனை உணர்த்துகிறது.
தற்போது நிஷா மற்றும் அவரது தந்தை, வட அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் அமைந்துள்ள டெனாலி மலையை நோக்கி அடுத்த கட்டப் பயணத்தைத் தொடங்கியுள்ளனர். மலையேற்ற உலகில் மிகவும் சவாலான சிகரங்களில் ஒன்றாகக் கருதப்படும் டெனாலியை வெல்வதற்கான தீவிரப் பயிற்சிகளும் எடுத்துக்கொண்டிருக்கிறார் நிஷா. ஏழு கண்டங்களின் ஏழு உயரமான சிகரங்களையும் அடையும் இலக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்ற வேண்டும் என்பதே நிஷாவின் அடுத்த கனவு. அது நிறைவேறினால், உலகின் அனைத்து கண்டங்களிலும் உள்ள உயரமான சிகரங்களை மிக இளம் வயதில் கடந்த இந்தியப் பெண் என்ற புதிய வரலாற்றுச் சாதனையையும் அவர் படைப்பார்.
சாதனை என்பது வயதுடன் தொடர்புடையது அல்ல; அது கனவு காணும் துணிச்சலுடனும், அந்தக் கனவை நனவாக்கும் உழைப்புடனும் தொடர்புடையது. அந்த உண்மையை தனது பயணத்தின் மூலம் நிரூபித்து வருகிறார் சென்னை மாணவி நிஷா சசிகுமார். வாழ்த்துக்கள் நிஷா!
- ஆ. கவின்.
