சென்னையில் ரூ.86 லட்சம் மதிப்பிலான பெட்ரோ கெமிக்கல் ஆயிலுடன் லாரி கடத்தல்: டீசலில் கலந்து விற்பனை செய்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் உட்பட 3 பேர் கைது!
சென்னை: சென்னையில் ரூ.86 லட்சம் மதிப்பிலான 28 மெட்ரிக் டன் உயர்தர கெமிக்கல் ஆயிலுடன் டேங்கர் லாரியைக் கடத்தி, அதனைப் பெட்ரோல் பங்க் உரிமையாளரிடம் விற்பனை செய்துவிட்டுத் தலைமறைவான பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஓட்டுநர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட கெமிக்கல் ஆயிலை டீசலுடன் கலந்து விற்பனை செய்த பெட்ரோல் பங்க் உரிமையாளரும் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.
சென்னை மணலியில் உள்ள தனியார் பெட்ரோலியப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் அம்பர்நாத்தில் உள்ள சாய் பெர்ட்டிலைசர் நிறுவனத்திற்கு ரூ.86 லட்சம் மதிப்பிலான 28 மெட்ரிக் டன் உயர்தர கெமிக்கல் ஆயில் டேங்கர் லாரியில் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த லாரியை பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ் பஸ்வான் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். ஆனால், சரக்குடன் லாரியையும் கடத்திச் சென்ற அவர் தலைமறைவானார்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மேலாளர் அளித்த புகாரின் பேரில், ஆவடி காவல் ஆணையர் உத்தரவின்படி தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பீகார், சூரத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பதுங்கியிருந்த ஓட்டுநரை போலீசார் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். இதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பதுங்கியிருந்த தினேஷ் பஸ்வானை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், கடத்தப்பட்ட கெமிக்கல் ஆயிலை கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த இளங்கோவன் மற்றும் குமார் ஆகிய தரகர்கள் மூலம் ஏழுமலை என்பவருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
திருக்கோவிலூர் மெயின் ரோட்டில் 'பாரத் பயோ' என்ற பெயரில் பெட்ரோல் பங்க் நடத்தி வரும் ஏழுமலை, இந்த உயர்தர கெமிக்கல் ஆயிலை லாரியுடன் வாங்கியுள்ளார். பின்னர், அந்தக் கெமிக்கல் ஆயிலை டீசலுடன் கலந்து பொதுமக்களுக்கு கலப்பட டீசலாக விற்பனை செய்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, இந்தக் கடத்தல் மற்றும் கலப்பட மோசடியில் தொடர்புடைய லாரி ஓட்டுநர் தினேஷ் பஸ்வான், தரகர் இளங்கோவன் மற்றும் பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஏழுமலை ஆகிய மூன்று பேரையும் சாத்தாங்காடு குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு தரகர் குமார் உள்ளிட்டோரின் பங்கு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


