சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில், மாநகர பேருந்து மற்றும் மின்சார ரயிலில் தலா ரூ.1 கட்டணம் செலுத்தி ஒருமுறை சலுகை பயணம் செய்யும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மின்சார ரயில், மெட்ரோ, மாநகர பேருந்து உள்ளிட்டவற்றில் பயணிக்க செப்.22ம் தேதி Chennai One செயலியை தமிழ்நாடு அரசு தொடங்கியது. இந்த செயலியில், அனைத்து பொது போக்குவரத்துக்கும் டிக்கெட் பெறும் வசதி இருப்பதால், பயணியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தினமும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 10ம் தேதி மட்டும் அதிகபட்சமாக 29,704 டிக்கெட்டுகள் விற்று சாதனை புரிந்துள்ளது.
இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், புதிய சலுகை விரைவில் அறிமுகமாக உள்ளது. அதன்படி, பி.எச்.ஐ.எம்., எனப்படும், 'பீம், நேவி' செயலிகளை பயன்படுத்தி, யு.பி.ஐ., வாயிலாக பணம் செலுத்துவோர், மெட்ரோ ரயில், மின்சார ரயில், மாநகர பேருந்துகளின் டிக்கெட்டை ஒரு ரூபாய் செலுத்தி, முதல் முறை மட்டும் பயணம் செய்யலாம். விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகருக்கு மெட்ரோ ரயிலில் செல்ல, 40 ரூபாய் கட்டணம். சென்னை ஒன் செயலியை பயன்படுத்தி, பீம் மற்றும் நேவி செயலிகள் வாயிலாக டிக்கெட் எடுத்தால், ஒரு ரூபாய் கட்டணம் தான். பஸ், மின்சார ரயிலிலும் பயணிப்போரும் இந்த சலுகையை பெறலாம். இந்த சலுகையை, ஒரு டிக்கெட்டுக்கு ஒரு முறை மட்டும்தான் கிடைக்கும். இந்த நடைமுறை ஓரிரு நாளில் பயன்பாட்டிற்கு வரும்.
