சென்னையில் இருந்து 4 லாரிகளில் ஏற்றிச் சென்ற 86 டன் வெங்காயத்தை இறக்க முடியாமல் ஓட்டுநர்கள் தவிப்பு..!!
சென்னை: சென்னை கொருக்குப்பேட்டையில் இருந்து ஒன்றிய அரசின் NAFED நிறுவனம் சார்பில் ரேஷன் கடைகளில் விற்பனை செய்வதற்காக கொள்முதல் செய்யப்பட்ட 86 டன் வெங்காயம், தரமற்றதாக இருந்ததால் தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறை அதனை வாங்க மறுத்துவிட்டது. கூட்டுறவுத் துறை கொள்முதல் செய்ய மறுத்ததை தொடர்ந்து, அந்த வெங்காயத்தை தனியாரிடம் விற்க NAFED நிறுவனம் முயன்றது. ஆனால், தனியாரும் வாங்க முன்வராததால் நிலைமை சிக்கலானது.
இதையடுத்து, கொருக்குப்பேட்டையில் இருந்து அலமாதிக்கு வெங்காயத்தை ஏற்றிச் சென்ற 4 லாரிகள் எங்கு இறக்குவது என்று தெரியாமல் கடந்த 3 நாட்களாக சாலையோரம் காத்துக்கிடக்கின்றன. லாரிகளில் இருந்த 80 டன் வெங்காயமும் முற்றிலுமாக அழுகிவிட்டதால், அதனை குப்பையில் மட்டுமே கொட்ட முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. எனினும், அந்த அழுகிய வெங்காயத்தை எங்கு சென்று கொட்டுவது என்றுகூட அதிகாரிகள் உரிய வழிகாட்ட மறுப்பதாக லாரி ஓட்டுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதிகாரி தரப்பில் இருந்து எந்தவிதமான முடிவும் தெரிவிக்கப்படாததால், கடந்த 3 நாட்களாக ஓட்டுநர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும், அழுகிய வெங்காயத்தில் இருந்து புழுக்கள் வெளியேறுவதாலும், கடுமையான துர்நாற்றம் வீசுவதாலும் லாரிகளில் உட்காரக்கூட முடியவில்லை என்று ஓட்டுநர்கள் தங்களது வேதனையை கண்ணீருடன் வெளிப்படுத்தியுள்ளனர். பொறுப்பற்ற முறையில் செயல்படும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


