சென்னை: சென்னை மயிலாப்பூரில் தெரு நாயை அடித்துக் கொன்று குப்பைத் தொட்டியில் வீசிய நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை மயிலாப்பூரில் காரணீஸ்வரர் கோயில் தெருவில் டீக்கடை நடத்தி வருபவர் மோகன் (56). இவர் காலை வழக்கம்போல் டீக்கடை திறந்துள்ளார். அப்போது தெருநாய் ஒன்று தனது டீ கடைக்கு வந்த முதியவரை கடிக்க வந்தது.
இதனை பார்த்த மோகன் விரட்டிய போது அவரையும் கடிக்க வரவே, கட்டையால் தாக்கியுள்ளார். இதனால் நாய் இறந்த நிலையில், அதனை குப்பைத் தொட்டியில் வீசியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதையடுத்து விலங்குகள் நல ஆர்வலர்கள் சார்பில் மயிலாப்பூர் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
