திமுக ஆட்சியில் போடப்பட்ட முக்கிய திட்டங்களுக்கு தடை; சென்னை மாநகராட்சியில் ரூ.700 கோடி வரையிலான டெண்டர்கள் ரத்து: நிதி நிலைமை சரியில்லை என காரணம் கூறும் அதிகாரிகள்
சென்னை: சென்னை மாநகராட்சியில், திமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களுக்கு தடை விதிக்கும் வகையில் ரூ.700 கோடி வரையிலான டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிதி நிலைமை சரியில்லை, சீரானதும் மீண்டும் கோரப்படும் என்றும் அதிகாரிகள் கூறி வருகின்றனர்.
தமிழ்நாட்டின் தலைநகரும் மிகப்பெரிய மாநகராட்சியாக சென்னை மாநகராட்சி விளங்கி வருகிறது. வேலை வாய்ப்பு, வாழ்வாதாரங்களை தேடி சென்னையில் செட்டில் ஆகும் மக்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கனிசமாக அதிகரித்து வருகிறது. இதுதவிர வணிகம், அரசியல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தினமும் சுமார் 25லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்னைக்கு வந்து செல்கின்றனர். மக்கள் தொகைக்கு ஏற்ப உரிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தினால் தான் மக்கள் வாழ முடியும். இதற்கான திட்டங்களை சென்னை மாநகராட்சி மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பாலங்கள், சாலைகள், பார்க்கிங் திட்டங்கள், பூங்காங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், நீர்நிலைகள் பராமரிப்பு என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையின் ஓராண்டு பட்ஜெட் என்பது சுமார் 10 ஆயிரம் கோடியாகும். இந்த நிதியாண்டில் சுமார் ரூ.9,319 கோடி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதில் வருவாய் செலவினம் மட்டுமே ரூ.6,146 கோடியாகும். வருவாய் பற்றாக்குறை என்பது ரூ.1,602 கோடியாக இருக்கிறது. இந்த சூழலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக அரசு பொறுப்பேற்றுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு புதிய திட்டங்களை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கான டெண்டர்களை ரத்து செய்து வருவது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்்தியுள்ளது.
கடந்த வாரம், சென்னை மாநகராட்சி சார்பில் அடையாறு, பெசன்ட் நகர், பெரியமேடு, கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபாதைகள் அமைப்பதற்காக விடப்பட்ட ரூ.284 கோடி மதிப்பிலான 35 டெண்டர்களை சென்னை மாநகராட்சி ரத்து செய்திருந்தது. மேலும், சிறிய அளவிலான 150 டெண்டர்களையும் அதிகாரிகள் ரத்து செய்தனர். இதேபோன்று, கவுன்சிலர்களுக்கான வார்டு பராமரிப்பு நிதி ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாகவும் தமிழக அரசு குறைத்துவிட்டதாக கூறப்படுகிறது.
அத்துடன் சென்னை மாநகராட்சிக்கான தற்போதைய செலவுகளை மேலும் குறைக்கவும், புதிய உள்கட்டமைப்பு திட்டங்களை வகுக்கவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளச்சேரி புதிய மேம்பால திட்டம் உள்ளிட்ட ரூ.700 கோடி வரையிலான டெண்டர்களை தமிழக அரசு ரத்து செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக, திமுக ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட சில டெண்டர்கள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருவ பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் இந்த செயல்களால், சென்னை மாநகராட்சிக்கு கிடைக்க வேண்டிய திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்படும் நிலை உருவாகியுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், `` சென்னை மாநகராட்சிக்கு ஏற்பட்டுள்ள நிதிச்சுமை காரணமாக ரத்து செய்யப்பட்ட டெண்டர்கள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதிக மூலதனம் தேவைப்படும் உள்கட்டமைப்பு திட்டங்கள் மட்டுமே தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சியின் நிதி நிலைமை சீரடைந்த பிறகு, இந்தத் திட்டங்கள் அனைத்தும் மறுபரிசீலனை செய்யப்பட்டு மீண்டும் புதிய டெண்டர்கள் கோரப்படும். அதே நேரத்தில், பொதுமக்களுக்குப் பயன்படுவதோடு மாநகராட்சிக்கு வருவாய் ஈட்டித் தரும் திட்டங்களான மல்டிலெவல் வாகன நிறுத்துமிடங்கள் போன்ற பணிகள் எந்தவிதத் தடையுமின்றி வழக்கம்போல் தொடர்ந்து நடைபெறும்’’ என்று தெரிவித்துள்ளனர்.


