சிறப்பு செய்தி
இந்தாண்டு தொடக்கத்தில் பணிகளை முடிக்க திட்டமிட்ட நிலையில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பணிகள் மந்தமாக நடந்து வருகிறது. இதனால் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, பொருளாதாரம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை மற்றும் பெங்களூருவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 48 (NH48) ஆகும். தென்னிந்தியாவின் மிகவும் பரபரப்பான நெடுஞ்சாலைகளில் ஒன்று. இது தமிழகத்தின் முக்கிய தொழில்துறை பகுதிகளான பெரும்புதூர், ஒரகடம், வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, ஒசூர் உள்ளிட்ட இடங்களை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையாகும். மேலும், முக்கிய தொழிற்சாலைகளான ஹூண்டாய், நிசான், ராயல் என்பீல்டு, டெல்லி டிரான்ஸ்போர்ட் லாஜிஸ்டிக்ஸ், பாக்ஸ்கான் போன்ற நிறுவனங்கள் இந்த சாலையில் சார்ந்துள்ளன. இதனால் இந்த நெடுஞ்சாலை தொழில்துறையின் உயிர் நரம்பு என்றும் அழைக்கப்பட்டது.
தற்போது இந்த நெடுஞ்சாலை சீரமைப்பு பணி காரணமாக மக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொழில்துறை வாகன ஓட்டுநர்களுக்கு தலைவலியாக மாறியுள்ளது. பள்ளங்கள், சுரங்கங்கள், போக்குவரத்து நெரிசல், விபத்துகள் ஆகியவற்றால் பயணிகளின் உயிரையே பறிக்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு தொடங்கப்பட்ட மதுரவாயல் முதல் வாலாஜாபேட்டை வரையிலான 64 கிலோ மீட்டர் தொலைவிற்கு 6 வழிச்சாலையாக விரிவாக்கம் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் 3 ஆண்டுகள் கடந்தும் தற்போது வரை இதற்கான பணிகளில் எவ்வித மாற்றமும் ஏற்படாமல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு இருக்கிறது. இத்திட்டத்தின் தாமதம் காரணமாக போக்குவரத்து நெரிசல், தொழில்துறை வளர்ச்சிக்கு தடை இழப்புகள் மற்றும் அவ்வப்போது ஏற்படும் விபத்துகளால் உயிரிழப்புகள் பெருமளவில் ஏற்பட்டுள்ளன. சுமார் 64 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.1500 கோடி செலவில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மதிப்பீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியது. இந்த பணிகள் 2 கட்டங்களாக பிரிக்கப்பட்டது.
அதன்படி, மதுரவாயல் முதல் பெரும்புதூர் வரை 28 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.400 கோடியிலும், பெரும்புதூர் முதல் காஞ்சிபுரம் வரை 36 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.500 கோடியிலும், காஞ்சிபுரம் முதல் வாலாஜாபேட்டை வரை 36 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.600 கோடி என 3 கட்டங்களாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் இன்னும் மேம்பால பணிகள் முடிக்கப்படவில்லை. இந்த திட்டத்தில் 40 சதவீதம் பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளன. கடந்த 2018ம் ஆண்டு முன்னேற்பாடுகள் தொடங்கிய நிலையில் பல்வேறு காரணங்களால் இழுபறியாக சென்று கொண்டிருக்கிறது.
2025ம் ஆண்டின் முதல் பாதியில் நிச்சயம் சென்னை - பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே சாலை பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்று ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உறுதியாக தெரிவித்திருந்தார். ஆனால் எவ்வித பணிகளும் முடிவடையவில்லை. மேலும் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் மீண்டும் தொடங்கப்பட்டு விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். இந்நிலையில் இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவத்தில் பிரச்னைகள், மழைக்கால தடை, ஒப்பந்தம் மாற்றங்கள், தொழில்நுட்ப சிக்கல்கள் உள்ளிட்டவை தாமதத்திற்கு முக்கிய காரணியாக அமைந்தாக தேசிய நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘இது நெடுஞ்சாலை அல்ல, விபத்து மைதானம். தினசரி இந்த நெடுஞ்சாலை வழியாகச் செல்லும் வாகன ஓட்டுநர்கள், சாலையா இல்லை கிணறு தாண்டும் போட்டியா என கேள்வி எழுப்புகின்றனர். இரவு நேரத்தில் வாகனம் ஓட்டுவது மிகவும் கடினமாக உள்ளது. முறையான விளக்குகள் இல்லை. இரு வழி சாலையில் லாரிகள் மூன்று வரிசையாக ஓடுகின்றன. போக்குவரத்து நெரிசல் பகல் முதல் இரவு வரை குறையவே இல்லை’’ என்றனர்.
லாரி ஓட்டுநர்கள் கூறுகையில், ‘‘நாங்கள் சுங்கக்கட்டணம் செலுத்துகிறோம். ஆனால் சாலை சரியாக இல்லை. பல இடங்களில் டயர்கள் கிழிகின்றன. ஒரு பயணத்திற்கே மூன்று மணி நேரம் கூடுதலாக ஆகிறது. மேலும் ஒவ்வொரு நாளும் இந்த சாலையில் விபத்துகள் ஏற்படுகிறது. இந்த வழியில் உள்ள வாலாஜா மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடிகள் வருடத்திற்கு தலா ரூ.45 கோடி என மொத்தம் ரூ.90 கோடி வருவாய் ஈட்டுகின்றன. ஆனால் அதில் ஒரு பங்கும் சாலை பராமரிப்புக்கு பயன்படுத்தப்படவில்லை. சாலைகள் பள்ளங்களால் நிறைந்துள்ளதால், வாகனங்கள் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. எனவே சாலைகள் சரியாக இல்லாத போது சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்’’ என்றனர்.
தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரி கூறியதாவது:
கடந்த 2018ம் ஆண்டு முன்னேற்பாடுகள் தொடங்கிய நிலையில் பல்வேறு காரணங்களால் இழுபறியாக சாலைப்பணி சென்று கொண்டிருக்கிறது. இந்த திட்டம் ஒன்றிய அரசின் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பணிகள் தாமதம் ஏற்பட்டுள்ளதற்கு பல்வேறு காரணம் உள்ளன. ஆரம்பத்தில், கட்டுமான பொருட்கள் பற்றாக்குறை மற்றும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் நெடுஞ்சாலை ஆணையம் இடையேயான தகராறு காரணமாக தாமதம் ஏற்பட்டது. ஒப்பந்த நிறுவனங்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. பணிகள் விரைவில் மீண்டும் தொடங்கப்படும். 2026 ஏப்ரல் வரை அனைத்து மேம்பால பணிகள் முடிவடையும். இதில் தமிழ்நாடு அரசு ஒத்துழைக்காததால் சில பணிகள் தாமதமானது. இருப்பினும் விரைவில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து நிபுணர்கள் கூறுகையில், ‘‘நெடுஞ்சாலை 48 என்பது தென்னிந்தியாவின் முக்கிய சரக்கு வழிப்பாதையாகும். இப்படிப்பட்ட சாலைகள் தாமதமாகிவிட்டால், தொழில் வளர்ச்சி நின்று போகும். மேலும், தற்காலிக சாலை பராமரிப்பு கூட செய்யப்படவில்லை என்பது பெரும் குறையாக உள்ளது. இது வெறும் சாலை பிரச்னை அல்ல. இது மனித உயிர் பாதுகாப்பு பிரச்னை. சாலைகளில் மின்விளக்குகள், சிக்னல்கள், வேகக்கட்டுப்பாடு இல்லாதது மிகவும் ஆபத்தானது. இதனால் இந்த நெடுஞ்சாலை வளர்ச்சி வழி அல்ல, விபத்து வழியாக மாறியுள்ளது. சாலை விரிவாக்கம் என்ற பெயரில் மூன்று ஆண்டுகளாக நடக்கும் தோண்டுதல் பணிகள் காரணமாக ஆயிரக்கணக்கான பயணிகளின் நாள்தோறும் பிரச்னையாகவே உள்ளது. மேலும் பணி தாமதம் தொடர்ந்தால், போக்குவரத்து பிரச்னையாக மட்டுமல்லாமல் மாநிலத்தின் தொழில், பொருளாதாரம் மற்றும் மக்களின் உயிரை சிதைக்கும் தேசிய பிரச்னையாக மாறும் அபாயம் உள்ளது’’ என்றனர்.
மேம்பாலம் பணிகள்
- ஸ்ரீபெரும்புதூர் முதல் காஞ்சிபுரம் வரையிலான 36 கிலோ மீட்டர் தொலைவிற்கு மேம்பாலங்கள், தரைபாலங்கள் 17 திட்டமிடப்பட்டது. ஆனால் இதில் எந்த மேம்பால பணிகளும் முடிவடையவில்லை.
- ஸ்ரீபெரும்புதூர் சிப்காட், சுங்குவார்சத்திரம், நந்திமேடு, ஆட்டுப்புதூர், காஞ்சிபுரம் சந்திப்பு, பாலுசெட்டி சத்திரம் உள்ளிட்ட இடங்களில் மேம்பால பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவரையும் தருவாயில் உள்ளது.
சாலை விபத்துகள்
- மோசமான நெடுஞ்சாலையின் காரணமாக 176 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு திடீர் பள்ளங்கள், மின் விளக்குகள் இல்லாதது, மோசமான சாலை குறியீடுகள் ஆகியவற்றால் உயிரிழப்புகள் நேரிடுகிறது. இரவு நேரங்களில் அதிக விபத்துகள் ஏற்படுகிறது.
- சாலைகள் இப்படி இருந்தால், புதிய முதலீடுகள் வராது. இது மாநிலத்தின் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது. சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டாலும், சாலை மோசமான நிலையில் இருந்து வருகிறது என தொழில்சாலை நிறுவனங்கள் வேதனை தெரிவித்துள்ளன.
சுங்கக்கட்டண வசூல்
ஸ்ரீபெரும்புதூர் மற்றும் வாலாஜா ஆகிய 2 சுங்கச்சாவடியில் கடந்த 13 வருடங்களில் ரூ.1,170 கோடி கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால் முறையான பராமரிப்பு, மாற்றுப்பாதை, சாலை விளக்கு என எதுவும் பராமரிக்கப்படவில்லை.
