சென்னைக்கு தொடர்ந்து கடத்தல்; போலீசார் வைத்த பொறியில் ஆந்திரா வியாபாரி சிக்கினார்: 18 கிலோ கஞ்சா பறிமுதல்
பெரம்பூர்: சென்னை போலீசார் வைத்த பொறியில் ஆந்திராவை சேர்ந்த மொத்த கஞ்சா வியாபாரி சிக்கினார். அவரிடம் இருந்து 18 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.சென்னை ஓட்டேரி, புளியந்தோப்பு மற்றும் பேசின் பிரிட்ஜ் பகுதிகளில் கஞ்சா வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், முக்கிய கஞ்சா வியாபாரியை கைது செய்ய புளியந்தோப்பு துணை கமிஷனர் உத்தரவின்படி, தனிப்படை எஸ்ஐக்கள் ராஜ்கிரண், முரளிசங்கர் தலைமையில் போலீசார், ஆந்திர மாநிலம் அனக்கப்பள்ளி மாவட்டத்தை சேர்ந்த உபேந்திரா (25) என்பவரை கண்காணித்து வந்தனர். இவர், ஆந்திராவில் இருந்து மொத்தமாக கஞ்சா பொட்டலங்களை வாங்கிவந்து விற்பனை செய்துள்ளார்.
இதையடுத்து முக்கிய நபரை பிடிப்பதற்காக ஓட்டேரி போலீசார், ஒருவரை செட்டப் செய்து ‘’தங்களுக்கு மொத்தமாக கஞ்சா வேண்டும்’’ என்று ஆந்திராவில் உள்ள உபேந்திராவிடம் பேச வைத்து உடனே 50 கிலோ கஞ்சா வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதற்கு உபேந்திரா, ‘’ முதலில் 18 கிலோ கஞ்சா தருகிறேன். அதன் பிறகு பார்த்துக்கொள்ளலாம்’’ என்று தெரிவித்து நேற்றிரவு ஓட்டேரி பகுதிக்கு 18 கிலோ கஞ்சாவுடன் உபேந்திரா வந்துள்ளார்.
அப்போது ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், உதவி ஆய்வாளர்கள் ராஜ்கிரண், முரளி சங்கர் ஆகியோர் தலைமையிலான போலீசார் வந்து உபேந்திராவை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தியதில், சென்னையில் இருந்து செல்லும் நபர்களுக்கு கஞ்சா பொட்டலங்களை வாங்கி அனுப்புவதும் சென்னைக்கு கஞ்சாவை கொண்டுவந்து டெலிவரி செய்துவந்ததும் தெரியவந்தது. இதையடுத்து உபேந்திராவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் பூந்தமல்லியை சேர்ந்த வசந்த சுமனை (25) போலீசார் தேடி வருகின்றனர்.




