சென்னை விமானநிலையத்தில் 6வது நாளாக ரத்தாகும் விமானங்கள் எண்ணிக்கை 100 ஆக உயர்வு: பிற விமானங்களில் கட்டணம் உயர்வு
மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் இன்று 6வது நாளாக, ஒரே நாளில் சுமார் வருகை, புறப்பாடு என மொத்தம் 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் முன்பதிவு செய்திருந்த பயணிகள், பிற ஏர்லைன்ஸ் விமானங்களை நாடும்போது, அதன் கட்டணங்கள் பலமடங்கு உயர்ந்துள்ளது. இதனால் விமானப் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களின் சேவைகளிவ் ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாக, சென்னை விமானநிலையத்தில் இன்று 6வது நாளாக அதன் விமான சேவைகள் பெரிதளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. நேற்ற அதிகாலை முதல் நள்ளிரவு வரை, சென்னை விமானநிலையத்தில் இன்டிகோ ஏர்லைன்சின் வருகை, புறப்பாடு என மொத்தம் 96 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு இருந்தன.
இந்நிலையில், சென்னை விமானநிலையத்தில் 6வது இன்று இன்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவைகளின் ரத்து எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. இதன்படி, இன்று அதிகாலை முதல் நள்ளிரவு வரை, சென்னை விமானநிலையத்தில் 50 புறப்பாடு விமானங்கள், 50 வருகை விமானங்கள் என மொத்தம் 100 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இன்று மாலை கணக்கெடுப்பின்போது, இதன் எண்ணிக்கை 100ஐயும் கடந்து போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, வரும் 10ம் தேதி முதல் இன்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவைகள் துவங்கினாலும், வரும் 15ம் தேதி அளவில்தான் வழக்கமான நிலைக்கு திரும்பும் என்று கூறப்படுகிறது. இதே நிலை வரும் 15ம் தேதிவரை தொடர்ந்தால், அது விமானப் பயணிகளுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை விமானநிலையத்தில் இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களில் முன்பதிவு செய்திருந்த பயணிகள், அதன் டிக்கெட்டுகளை ரத்து செய்துவிட்டு, பிற ஏர்லைன்ஸ் விமானங்களில் பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்ய துவங்கியுள்ளனர்.
எனினும், டிக்கெட்டுகளை ரத்து செய்யும் பயணிகளின் கையில் பணத்தை கொடுக்காமல், அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று இன்டிகோ ஏர்லைன்ஸ் தரப்பில் கூறுகின்றனர். இதன்படி, டிக்கெட்டுகளை ரத்து செய்யும் பயணிகளின் வங்கி கணக்குக்கு பணம் ரீஃபண்ட் வராமல் காலதாமதமாகவும் பயணிகள் தரப்பில் கூறுகின்றனர். இதேபோல், பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே பிற ஏர்லைன்ஸ் விமானங்களில் பயணிகள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போது, அதன் கட்டணங்கள் பலமடங்கு உயர்த்தப்பட்டு உள்ளன.
இதைத் தொடர்ந்து, உள்நாட்டு விமான டிக்கெட்டுகளுக்கு உச்சவரம்பாக, ஒரு டிக்கெட்க்கு, 500 கிமீ வரையிலான பயண தூரத்துக்கு அதிகபட்சம் ரூ.7,500, 1000 கிமீ வரையிலான பயண தூரத்துக்கு அதிகபட்சம் ரூ.12 ஆயிரம், 1500 கிமீ தூரத்துக்கு அதிகபட்சம் ரூ.15 ஆயிரம், அதற்குமேல் உள்ள பயணத்துக்கு ரூ.18 ஆயிரம் என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் உச்சவரம்பு நிர்ணயித்து உள்ளது. எனினும், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் விதித்துள்ள பயண கட்டண நிர்ணய உத்தரவை எந்தவொரு தனியார் ஏர்லைன்ஸ் விமான நிறுவனங்களும் முறையாக அமல்படுத்துவது இல்லை. அந்நிறுவனங்கள் வழக்கம் போல் பல்வேறு காரணங்களை கூறி கூடுதல் கட்டணங்களை வசூலித்து வருகின்றன என்று பயணிகள் வேதனை தெரிவித்தனர்.