செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானம் கீழே விழுந்து விபத்து..!!
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானம் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. 2 விமானிகள் பயிற்சி விமானத்தில் உள்ளே இருந்த நிலையில், 2 விமானிகளும் பாராசூட் மூலம் கீழே குதித்து உயிர் தப்பினார். நேற்றைய தினம் புதுக்கோட்டை அருகே பயிற்சி விமானம் தொழில்நுட்ப கோளாறால் தரை இறக்கப்பட்ட நிலையில், இன்று பயிற்சி விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் கீழே விழுந்துள்ளது.
சென்னை தாம்பரத்தில் இந்திய ராணுவத்திற்கான விமானப்படை பள்ளி இயங்கி வருகிறது. இந்த விமானப்படையில் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், தாம்பரம் பகுதியில் இருந்து ராணுவத்துக்கு சொந்தமான விமானம் சென்னை அருகே திருப்போரூர் பகுதியில் வானில் பறந்தபோது எதிர்பாராத விதமாக வானில் இருந்து விமானம் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது.
கோளாறு ஏற்பட்ட விமானம், கட்டுமானப் பணி நடைபெற்ற இடம் ஒன்றுக்கு அருகே சகதியில் விழுந்து நொறுங்கியது. ஆட்கள் யாரும் இல்லாத இடத்தில் விமானம் விழுந்ததால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. விமான விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விமானம் எங்கிருந்து வந்தது? எங்கே சென்றுகொண்டிருந்தது? கோளாறு காரணமாக விமானம் கீழே விழுந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாமல்லபுரம் அருகே பயிற்சி விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.