Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

செங்கல்பட்டு அருகே வங்கியில் அடகுவைத்த 40 சவரன் நகையை மீட்டுதருவதாக மோசடி: நடவடிக்கை எடுக்காமல் அலைகழிப்பதாக பெண் புகார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே வங்கியில் அடகுவைத்த 40 சவரன் நகையை மீட்டுதருவதாக மோசடி செய்தவர்கள் மீது கொடுத்த புகார் மீது 3 ஆண்டாக நடவடிக்கை எடுக்காமல் அலைகழிப்பதாக போலீஸ் மீது பெண் புகார் செய்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு மாவட்டம் மேலையூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வி (45). இவர், கணவரால் கைவிடப்பட்டு 3 பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். செல்வி, குடும்ப சூழ்நிலை மற்றும் கடன் காரணமாக தனது நகைகளை வங்கியில் அடகுவைத்துள்ளார்.

ஏற்கனவே அடகு வைத்திருந்த 40 சவரன் நகை மீது கூடுதல் தொகை பெறுவதற்காக முற்பட்டுள்ளார். அப்போது, செல்விக்கு அறிமுகமான கண்ணன் என்பவர் மூலம் பொலம்பாக்கம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நகை மதிப்பீட்டாளர் நாகராஜ் என்பவர் அறிமுகமாகியுள்ளார். அடகு வைத்த நகைகளை வேறு வங்கியில் மாற்றி அதிக தொகை பெற்று தருவதாக நாகராஜன் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய செல்வி, நகை சீட்டுகளில் கையொப்பமிட்டு நகைகளை மீட்கும் பொறுப்பை நாகராஜிடம் ஒப்படைத்துள்ளார்.

அதன்படி தனியார் பைனான்ஸ் மற்றும் எஸ்பிஐ வங்கியில் அடகுவைத்திருந்த 25 சவரன் நகைகளை மீட்டுள்ளார். இதுபோல் தனியார் வங்கியில் அடமானத்தில் இருந்த 15 சவரன் நகையையும் ரூ.4,74,000 செலுத்தி நாகராஜ் மீட்டுள்ளார். செல்வியின் 40 சவரன் நகைகளையும் மீட்டு அவரிடம் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். வாட்ஸ்அப்பில் சில அடமான ரசீதுகளை மட்டும் அனுப்பியுள்ளார். செல்வி நேரில் சென்று கேட்டபோது ஆபாசமாக திட்டி அவரை மிரட்டியுள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட செல்வி தன்னை ஏமாற்றிய நாகராஜ், அவரது மனைவி பிரியா, பிரியாவின் அக்கா பரிமளா மற்றும் வெங்கடேசன் ஆகிய 4 பேர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, தனது 40 சவரன் நகைகளை மீட்டு தருமாறு செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதற்கு முன்னதாக திருப்போரூர் காவல்நிலையம், செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையம் உள்ளிட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கொடுக்கிற பணத்தை பெற்றுக்கொண்டு விலகிக்கொள்ளும்படி போலீசார் செல்வியிடம் கூறியுள்ளனர்.

இதனால் செய்வதறியாது தவித்த செல்வி, அடுத்தகட்டமாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் நகையை ஏமாற்றியது குறித்து புகார் அளித்துள்ளார். அங்கிருந்தும் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புகாரை மாற்றவில்லை என கூறப்படுகிறது. பல்வேறு வகையில் விதவை பெண்ணான என்னை யும், என் பிள்ளைகளையும் கடந்த 3 ஆண்டுகளாக அலைக்கழித்து வருகின்றனர். என்ன செய்வதென தெரியாமல் நிற்கதியாக நிற்கிறோம் என கண்ணீர் மல்க அழுது புலம்பினார். இந்த சம்பவம் மேலையூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.