மதுரை: குற்றப்பத்திரிகைகளை ஆன்லைன் மூலம் தாக்கல் செய்ய உரிய பயிற்சி வழங்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த மச்சராஜா, தன் மீது தூத்துக்குடி மாவட்டம், சூரங்குடி போலீசார் கடந்த 2020ல் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். அரசு தரப்பில், மனுதாரர் மீதான வழக்கின் விசாரணை முடிந்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விளாத்திகுளம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் மீதான வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை ஏற்பதில் தாமதம் ஏன் என்று விளாத்திகுளம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, பல்வேறு குறைபாடுகளுடன் இறுதி அறிக்கை இருந்ததால் 3 முறை திருப்பி அனுப்பப்பட்டது என பதிலளிக்கப்பட்டது. தமிழ்நாடு-புதுச்சேரியில் குற்றப்பத்திரிகைகளை ஆன்லைன் வழியாக பதிவேற்றம் செய்வதை ஐகோர்ட் கட்டாயமாக்கி உள்ளது.
இதன்படி இணையதளத்துக்கு பதிலாக நேரடியாக அறிக்கைகளை சமர்ப்பிப்பது விதிமுறைகளுக்கு முரணானது. ஆனால், காவல் நிலையங்களில் போதுமான இணையதள வசதி இல்லாதது உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளும் இங்கு தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் காவல்துறையினர் மற்றும் நீதிமன்ற பணியாளர்களுக்கு போதிய பயிற்சி இல்லாததை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஒரு மாதமாக பயிற்சி வழங்கப்பட்டது.
அதன் பின்பு இணையதளங்களில் பிழையில்லாத இறுதி அறிக்கைகள் தாக்கல் செய்வது அதிகரித்து உள்ளது. எனவே, இறுதி அறிக்கைகளை இணையதளம் வழியாக தாக்கல் செய்வதை முறைப்படுத்துவதற்கு காவல் துறை அதிகாரிகள் மற்றும் நீதித்துறை ஊழியர்களின் ஒருங்கிணைந்த முயற்சிக்கு இந்த நீதிமன்றம் பாராட்டுகளை தெரிவிக்கிறது.
இந்த பயிற்சியின்போது ஏற்படுத்தப்பட்ட தீர்வுகள், நடைமுறைகள் குறித்து அரசுத்துறை தலைவர்கள், ஐகோர்ட் பதிவாளருக்கு உரிய தகவல் அறிக்கைகள் அனுப்பப்படும். அதன்படி அனைத்து மாவட்ட காவல் துறை அதிகாரிகளுக்கும் டிஜிட்டல் முறையிலான குற்றப்பத்திரிகைகளை ஆன்லைன் மூலம் தாக்கல் செய்ய உரிய பயிற்சிகளை அளிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
