Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஆவினில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி: அதிமுக மாஜி அமைச்சர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

விருதுநகர்: ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆன்லைன் மூலம் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றி விட்டதாக விருதுநகர் மாவட்டம், சாத்தூரை சேர்ந்த அதிமுக நிர்வாகி ரவீந்திரன் கடந்த 2021ம் ஆண்டு விருதுநகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் அதிமுக நிர்வாகி விஜய் நல்லதம்பி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதேபோல் சத்துணவு, கூட்டுறவு, ஆவின் உள்ளிட்ட வேலைகளுக்கு பலரிடம் ரூ.3 கோடி வரை பணம் பெற்று, ராஜேந்திர பாலாஜியிடம் கொடுத்ததாக விஜய் நல்லதம்பி புகார் அளித்தார்.

இதன்பேரில் ராஜேந்திர பாலாஜி உட்பட 7 பேர் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தலைமறைவான ராஜேந்திர பாலாஜியை 18 நாட்களுக்கு பின் கடந்த 2022, ஜன. 5ம் தேதி கர்நாடகா மாநிலத்தில் வைத்து தமிழக போலீசார் கைது செய்தனர். ஜன. 12ம் தேதி ராஜேந்திர பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனிடையே, கடந்த 2021ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கக் கோரி ரவீந்திரன் சார்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு தடைவிதிக்கக்கோரி ராஜேந்திர பாலாஜி, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

மேலும் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரிய தமிழ்நாடு அரசின் கடிதம் மீது ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம் என்றும் தெரிவித்தது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்க தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், வில்லிபுத்தூரில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண். 2ல் ராஜேந்திர பாலாஜி மீதான இரு வழக்குகளிலும் ஆன்லைன் மூலம் குற்றபத்திரிகை தாக்கல் செய்தனர்.