Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இடம் மாறியது ஏன்?

இந்தியாவில் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களை தயாரிக்கும் மெகா மையம் தமிழ்நாட்டின் ஓசூரில் அமைவதாக இருந்தது. இந்த மையமானது ரூ.15,803 கோடியில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஓசூரில் புதிதாக அமையவிருக்கும் விமான நிலையத்தோடு, இந்த ராணுவ மையத்தையும் கொண்டு வர வேண்டும் என்பது முக்கிய நோக்கமாக இருந்தது. முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.

இதற்காக தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசுடன் தீவிரமாக பேசி வந்தது. ஒருபக்கம் பயணிகள் விமானம், மறுபக்கம் ராணுவ விமான சோதனை மையம் என்று ஓசூரை உலகத்தரத்தில் மாற்றும் திட்டமும் அரசிடம் இருந்தது. தமிழ்நாடு-ஆந்திரா என்று இரண்டு மாநிலங்களுக்கும் இடையே இந்த திட்டத்தை பெறுவதில் பிராந்திய போட்டி இருந்தது. ஆனால் தற்போது ஒன்றிய அரசு, ஆந்திராவிற்கு ஆதரவு தந்துள்ளது. நேற்று முன்தினம் ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் நடந்த விழாவில் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கும், ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும் கலந்து கொண்டு, இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளனர்.

தொழில்நுட்ப ரீதியாகவும், உள்கட்டமைப்பு வசதிகளிலும் ஆந்திராவை விட, தமிழ்நாடு தான் (ஓசூர்) மிகச்சிறந்த வசதிகளை ஆபர் செய்திருந்தது. உதாரணமாக ஓசூரில் ஓடுதளம் 3.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஆந்திராவில் உள்ள ஓடுதளம் 2.1 கிலோ மீட்டர் தான் உள்ளது. ஆந்திரா இனிமேல் தான், நிலத்தை கையகப்படுத்தி 3 கிலோ மீட்டராக விரிவுபடுத்த வேண்டும். ஓசூரில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் இந்தியாவின் ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் ஏஜென்சியின் தலைமையகம் அமைந்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு செயல்பட்டிருந்தால், இந்த அருகாமை தற்போதுள்ள வான்வெளி உட்கட்டமைப்புடன் சிறந்த ஒருங்கிணைப்பை சாத்தியமாக்கி இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இப்படி பல்வேறு சாதகங்கள் இருந்தும் அரசியல் காரணங்களால் இந்த திட்டத்தை, ஒன்றிய அரசு ஆந்திராவிற்கு கொண்டு சென்றுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றமும், தற்போது நிலவிவரும் அரசியல் சூழலும் மிக முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, இந்த திட்டத்தை தமிழகத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று பெரும் முனைப்பு காட்டியது. இதற்காக பெருமளவில் தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் மேம்படுத்தப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. இதில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்று தற்போது ஆட்சி அமைத்துள்ளது. ஆனால் உறுதியான கொள்கையுடன், கடந்த அரசு காட்டிய முனைப்பை காட்டும் திறன் இன்றைய அரசுக்கு இல்லை.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஒன்றிய அரசு, தனது ஆட்சி நீடிக்க ஆதரவு நல்கும் சந்திரபாபுநாயுடுவின் ஆந்திராவிற்கு இதனை கைமாற்றியுள்ளது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். ஒட்டு மொத்த தமிழகமும், நமது மாநிலத்திற்கு இந்த திட்டம் வரும் என்று நினைத்திருந்த நிலையில் ஆந்திராவிற்கு மாறியுள்ளது ஒரு ஆரோக்கியமற்ற அரசியல். இதற்கு தற்போதைய தமிழக அரசின் அனுபவம் இன்மையும் ஒரு முக்கிய காரணம் என்கின்றனர் அவர்கள்.