Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

இதுதான் நீங்கள் கொண்டுவருவதாகச் சொன்ன மாற்றமா முதலமைச்சரே? திரைப்படக் காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் மட்டும் விலைவாசி குறைந்துவிடுமா? சீமான் கேள்வி

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது அதிகாலை 6 மணி முதல் நாளொன்றுக்கு ஆறு காட்சிகள் வரை திரையிட அனுமதி அளித்துள்ள தமிழ்நாடு அரசின் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது.‘காலை எழுந்தவுடன் படிப்பு’ என்று பாடினான் நம் பாட்டன் பாரதி. ஆனால், இன்றைய ஆட்சியாளர்களோ காலையில் எழுந்தவுடன் திரைப்படம் பார்க்கச் சொல்கிறார்கள். இளைஞர்களின் திறமைகளை வளர்க்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தொழில் முனைவோரை ஊக்குவிக்கவும் இவ்வளவு வேகமாக முடிவெடுக்காத தவெக அரசு, திரைப்படக் காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் மட்டும் இத்தனை ஆர்வம் காட்டுவது ஏன்?

திரைப்படக் காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் மட்டும் நாட்டில் வேலைவாய்ப்புகள் பெருகிவிடுமா? விலைவாசி குறைந்துவிடுமா? மக்களின் வறுமை ஒழிந்துவிடுமா? கல்வித்தரம் உயர்ந்துவிடுமா? அறிவாற்றல் வளர்ந்துவிடுமா? நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டுவிடுமா? ஏற்கனவே, தவெக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் டாஸ்மாக் மதுக்கடைகளின் நேரத்தை அதிகப்படுத்தியுள்ளது. இணைய வழி மதுவிற்பனை, உணவக மதுக்கூடம் என்று மதுவிற்பனையை அதிகப்படுத்தியுள்ளது.

இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டிய அரசு, போதையை அதிகரிப்பதிலும், பொழுதுபோக்கை விரிவுபடுத்துவதிலேயே தனது கவனத்தைச் செலுத்துவது என்ன மாதிரியான புரட்சிகரமான ஆட்சி நிர்வாகம்? திரைப்படத்திற்கும், போதைக்கும் பொழுதுபோக்குக்கும் முன்னுரிமை கொடுத்து எந்தச் சமூகம் வாழ்ந்து வளர்ந்திருக்கிறது? இதுதான் தமிழகத்துக்கு நீங்கள் கொண்டுவருவதாகச் சொன்ன மாற்றமா, முதலமைச்சர் அவர்களே.

புதிய திரைப்படங்களுக்கு அதிகாலை 6 மணி முதல் ஆறு காட்சிகள் வரை திரையிட அனுமதியளித்துள்ள முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். திரைப்படக் காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் காட்டும் அக்கறையை, பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்துவதிலும், நூலகங்களை மேம்படுத்துவதிலும், விளையாட்டுத் திடல்களை உருவாக்குவதிலும், புதிய தொழில்களைத் தொடங்குவதிலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதிலும் காட்டி மக்கள் நலனையும், சமூக முன்னேற்றத்தையும் முதன்மைப்படுத்தி ஆட்சி நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.