சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பார்சிலோனாவை பந்தாடி செல்சீ அசத்தல் வெற்றி
லண்டன்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட போட்டியில் பார்சிலோனா அணியை 3-0 என்ற கோல் கணக்கில் செல்சீ அணி அபாரமாக வெற்றி வாகை சூடியுள்ளது. யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட போட்டிகள் லண்டனில் நடந்தன. பலம் வாய்ந்த பார்சிலோனா - செல்சீ அணிகள் இடையே நடந்த போட்டியில் செல்சீ அணி துவக்கம் முதல் ஆக்ரோஷமாக ஆடி கோல் வேட்டையில் ஈடுபட்டது. அதனால் 1-0 என்ற கோல் கணக்கில் செல்சீ அணி முன்னிலை பெற்ற நிலையில், முதல் பாதியின் முடிவில் பார்சிலோனா அணி கேப்டன் ரொனால்ட் அராஜோ, முரட்டுத்தனமாக ஆடியதால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். அதன் பின் நடந்த போட்டியின்போது, செல்சீ அணியின் 18 வயது இளம் வீரர் எஸ்டெவா அற்புதமான கோலடித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். சில நிமிடங்களில் அதே அணியின் லியாம் டெலாப், 3வது கோலடித்து அசைக்க முடியாத நிலைக்கு உயர்த்தினார். நேற்றைய போட்டியில் சொதப்பலாக ஆடிய பார்சிலோனா அணியால் கடைசி வரை ஒரு கோல் கூட போட முடியவில்லை. அதனால், 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்ற செல்சீ, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.