புதுடெல்லி: பிடபுள்யுஎப் உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டன் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் விளையாட தகுதி பெற்ற இந்தியாவின் த்ரீசா ஜாலி காயத்ரி கோபிசந்த் ஜோடி பதக்கத்தையும் உறுதி செய்து அசத்தியது. இந்திரா காந்தி உள்ளரங்கில் நேற்று நடந்த காலிறுதியில் சீனாவின் ஜியா யி பான் ஸாங் ஷு ஜியான் ஜோடியுடன் மோதிய த்ரீசா காயத்ரி இணை 16-21 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கியது.
எனினும், அடுத்த 2 செட்களிலும் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த இந்திய வீராங்கனைகள் 16-21, 21-15, 21-13 என்ற செட் கணக்கில் அபாரமாக வென்று அரையிறுதிக்கு முன்னேறினர். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 1 மணி, 10 நிடங்களுக்கு நீடித்தது.
அரையிறுதிக்கு தகுதி பெற்றதன் மூலமாக இந்தியாவுக்கு குறைந்தபட்சம் ஒரு வெண்கலப் பதக்கம் கிடைப்பதை த்ரீசா காயத்ரி இணை உறுதி செய்துள்ளது. முன்னதாக, 2011ல் லண்டனில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஜுவாலா கட்டா அஷ்வினி பொன்னப்பா இணை வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு மீண்டும் பதக்கம் கிடைக்க உள்ளது.




