Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பாஜவுக்கு சவால்

நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்ட தொடர் வரும் 20ம் தேதி தொடங்க உள்ளது. 5 மாநில தேர்தலுக்கு பின்பு நடக்கும் இந்த நாடாளுமன்ற கூட்ட தொடரில் அனல் பறக்கும் விவாதங்கள் வழக்கம்போல் நடக்கவுள்ளது. இதில் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்களை நிறைவேற்ற முயலும் ஒன்றிய பாஜ அரசிற்கு, இப்போதும் ஆதரவு எம்.பி.க்களின் எண்ணிக்கை பெரும் சவாலாக உள்ளது. நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ஏற்கனவே இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, 2023ம் ஆண்டு செப்டம்பரில் சட்டமாக இயற்றப்பட்டுள்ளது. மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் இச்சட்டம் இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை. அதற்கு காரணம் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை முடிந்த பின்னரே இச்சட்டத்தை செயல்படுத்த முடியும்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் போதிய பலம் இல்லாததால், மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை சட்ட மசோதாக்களை நிறைவேற்றுவதில் ஆளும் பாஜ கூட்டணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. வரும் 2029ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இவ்விரு மசோதாக்களையும் நிறைவேற்றி, மொத்த மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543ல் இருந்து 850 ஆக மாற்றிட ஒன்றிய அரசு திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது. இதன்மூலம் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் திட்டமும் பாஜ அரசின் கையில் உள்ளது. ஆனால் இம்மசோதாக்களை நிறைவேற்றுவது என்பது எளிதாக இருக்காது. இச்சட்ட திருத்தங்களை மேற்கொள்ள நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜ கூட்டணிக்கு 3ல் 2 பங்கு பெரும்பான்மை தேவைப்படுகிறது.

இதற்காக தமிழக தவெக அரசை போலவே, ஒன்றிய அரசு ஆள்பிடிக்கும் வேலைகளில் கடந்த சில மாதங்களாகவே ஈடுபட்டு வருகிறது. எந்த கட்சியிலாவது எம்.பி.க்கள் அதிருப்தியில் இருந்தால், அவர்களை உடைத்தெடுத்து பாஜ கூட்டணியில் ஓட்டும் வேலையை பார்த்து வருகிறது. பாஜவின் இந்த குதிரை பேர அரசியலில் சமீபகாலமாக திரிணாமுல் காங்கிரஸ் 20 எம்.பி.க்களை இழந்து விட்டது. ஆம்ஆத்மியின் 7 எம்.பி.க்களையும், சிவசேனா(உத்தவ் தாக்கரே) 6 எம்.பி.க்களையும் பிரித்தெடுத்து சிகப்பு கம்பளம் விரித்து பாஜ கூட்டணி பக்கம் கொண்டு வந்து சேர்த்துள்ளனர். இருப்பினும் இவை எல்லாவற்றையும் சேர்த்து கணக்கெடுத்தால் கூட, மக்களவையில் பாஜவின் பலம் 293ல் இருந்து 319 என்ற முக்கால் கிணறு இலக்கை மட்டுமே எட்டுகிறது. மக்களவையில் 3ல் 2 பங்கு பெரும்பான்மை அடைய 360 எம்.பி.க்களின் ஆதரவு தேவையாக உள்ளது.

மாநிலங்களவையிலும் பெரும்பான்மைக்கு 161 எம்.பிக்கள் தேவைப்படும் நிலையில், ஆளும் பாஜ கூட்டணியில் 152 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர். வரும் மழைக்கால கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இட ஒதுக்கீட்டு திருத்த மசோதாக்களை நிறைவேற்றுவது பாஜவால் இயலாத காரியமாகவே உள்ளது. தொகுதி மறுவரையறை என்பது தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு அநீதி விளைவிக்கும் வகையிலே காணப்படுகிறது. மறுவரையறையின்படி வடமாநிலங்களுக்கு அதிக எம்.பி.க்கள் கிடைக்க வாய்ப்புள்ளதால், மசோதாவை மாற்றியமைத்து தென்மாநிலங்களின் ஆதரவையும் பெற்றால் மட்டுமே, இவ்விரு மசோதாக்களையும் பாஜ கூட்டணியால் நிறைவேற்ற முடியும். புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பும் தாமதமாகும் சூழலில், பாஜ கூட்டணிக்கு தொகுதி மறுவரையறை மசோதாவை சட்டமாக்குவது என்பது பெரும் தலைவலியாகவே இருக்க கூடும்.