ஆண்டாள் கோயிலில் கைசிக ஏகாதசியை முன்னிட்டு தெய்வங்களுக்கு 108 பட்டு வஸ்திரம் சாற்றும் வைபவம் கோலாகலம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள பெரியபெருமாள் சன்னதியில் கைசிக ஏகாதசியை முன்னிட்டு பெரியபெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி, ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் ஆகிய தெய்வங்களுக்கு 108 பட்டு வஸ்திரம் சாற்றும் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் உள்ள பெரிய பெருமாள் சன்னதியில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கைசிக ஏகாதசி தினத்தில் பெரியபெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி, ஆண்டாள், ரெங்கமன்னார் மற்றும் கருடாழ்வாருக்கு 108 பட்டு வஸ்திரங்கள் சாற்றும் வைபவம் கோலாகலமாக நடைபெறும்.
இதன்படி இந்தாண்டு கைசிக ஏகாதசியை முன்னிட்டு 108 பட்டு வஸ்திரம் சாற்றும் வைபவம் நேற்று இரவு நடைபெற்றது. இதையொட்டி முன்னதாக ஆண்டாள் கோயிலிலிருந்து ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் ஆகியோர் பெரியபெருமாள் சன்னதிக்கு கொண்டு வரப்பட்டனர். அங்குள்ள கோபால விலாசம் மண்டபத்தில் பெரிய பெருமாள், பூமாதேவி, ஸ்ரீதேவி, ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் மற்றும் ஆழ்வார்களுக்கு நேற்று இரவு 10 மணி முதல் இன்று அதிகாலை 4 மணி வரை 108 பட்டு வஸ்திரங்கள் சாற்றும் வைபவம் நடைபெற்றது. வேதபிரான் பட்டர் சுதர்சன் கைசிக புராணம் வாசித்தார். இதை தொடர்ந்து தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகளும், தீபராதனைகள் நடைபெற்றன.
தெய்வங்கள் ஒன்று சேர்ந்து காட்சியளிப்பதை காணவும், சாமி தரிசனம் செய்யவும் இன்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆண்டாள் கோவில் நிர்வாக அதிகாரி சக்கரை அம்மாள், கோயில் கண்காணிப்பாளர் அருண் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

