மத்திய கூட்டுறவு வங்கியில் கவரிங் நகை அடகு வைத்து ரூ.3 கோடி துணிகர மோசடி: பெண் மேலாளர் உள்பட 3 பேர் கைது
திருவண்ணாமலை: திருவண்ணாமலை காந்தி நகர் மத்திய கூட்டுறவு வங்கியில் கவரிங் நகை அடகு வைத்து ரூ.3 கோடி மோசடி தொடர்பாக பெண் மேலாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலை காந்தி நகரில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி கிழக்கு கிளையிடில், மங்கலம் அடுத்த கருமாரபட்டி கிராமத்தை சேர்ந்த ராமதாஸ், திருவண்ணாமலை அடுத்த அரடாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை ஆகிய இருவரும் கடந்த ஆண்டு கவரிங் நகைகளை அடமானம் வைத்து பணம் பெற்றதாக தெரிகிறது.
இதனைத்தொடர்ந்து அவர்கள் இருவர் மூலமாக வங்கியில் உள்ள மேலாளர் மற்றும் நகை மதிப்பீட்டாளர்கள் ரகசியமாக பேசி 20க்கும் மேற்பட்டோர் கவரிங் நகைகளை வங்கியில் அடகு வைத்து சுமார் ரூ.3 கோடி அளவில் பெற்றுள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு கூட்டுறவு வங்கியின் தணிக்கை பிரிவு அதிகாரிகள் காந்தி நகர் மத்திய கூட்டுறவு வங்கிக்கிளையில் நகைகளை ஆய்வு செய்தனர். அப்போது ராமதாஸ் மற்றும் ஏழுமலை உள்பட 22 பேரின் பெயரில் கவரிங் நகைகளை வைத்து ரூ.3 கோடி மோசடி செய்துள்ளதும், இதற்கு வங்கியின் மேலாளர் விஜயலட்சுமி, நகை மதிப்பீட்டாளர் கோபிநாதன் மற்றும் வங்கி பணியாளர்கள் உடந்தையாக இருந்ததாக பொருளாதார குற்றப்பிரிவுக்கு புகார் அளித்தனர். இதையடுத்து திருவண்ணாமலை பொருளாதார குற்றப்பிரிவின் தனிப்படை குழுவினர் விசாரணை நடத்தினர்.
இதில் கவரிங் நகைகளை வங்கியில் அடகு வைத்து சுமார் ரூ.3 கோடி மோசடி செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து வங்கியின் மேலாளர் விஜயலட்சுமி, நகை மதிப்பீட்டாளர் கோபிநாதன், ஏஜென்டு ஏழுமலை ஆகிய 3 பேரை நேற்றுமுன்தினம் போலீசார் கைது செய்தனர். பின்னர் 3 பேரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். உடந்தையாக இருந்த ராமதாஸ் மற்றும் கவரிங் நகைகளை வைத்து பணம் பெற்ற 20 பேர் மற்றும் உறுதுணையாக இருந்த அலுவலர்கள் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.