நாடு முழுவதும் 4,874 எலெக்ட்ரிக் வாகன சார்ஜர்களை நிறுவ ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்கள் கருதப்படுகின்றன. கடந்த மாதத்தில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை அபரிமிதமாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உச்சத்தில் இருப்பதும், போர் தீவிரம் காரணமாக மேலும் விலை உயரும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுவதும் இதற்குக் காரணம்.
ஆனால், எலெக்ட்ரிக் வாகனம் வாங்க பலரும் தயங்குவதற்கு, சார்ஜிங் செய்வதற்கான மையங்கள் போதுமான அளவில் இல்லை என்பது முக்கிய காரணம். இதனால் எலெக்ட்ரிக் வாகன ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், சார்ஜிங் மைய உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதம் ரூ.503.86 கோடி செலவில் 4,874 புதிய எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையங்களை அமைக்க ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கான,கேரளா, குஜராத், உத்தரபிரதேசம், ஆந்திரா, ராஜஸ்தான் மாநிலங்களில் இந்த மையங்கள் அமைக்கப்படும். இந்திய எண்ணெய் நிறுவனங்களான இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் ஆகியவை இவற்றை நிறுவன ஒப்புதல் அளிக்கப்பட்டள்ளது. இந்த மையங்களில் எலெக்ட்ரிக் டூவீலர், 3 சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள், டிரக், பஸ்களை சார்ஜ் செய்யலாம். எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிப்பதற்கான பேம் -2 திட்டத்தில் நாடு முழுவதும் ஏற்கெனவே 8,932 சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
