Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கே.வி.குப்பம் அருகே விநோதம் 17 வருடங்களுக்கு முன்பே தனக்கு தானே கல்லறை கட்டி காத்திருந்த இயற்கை வைத்தியர்: கதறி அழுதபடி இறுதிச்சடங்கு செய்த கிராமத்தினர்

கே.வி.குப்பம்: வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த செஞ்சி ஊராட்சி கொல்லை மேடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி(98). இவருக்கு ராணியம்மாள் என்கிற மனைவியும், நான்கு மகன்கள் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். விவசாயியான இவர் அதே பகுதியிலுள்ள இவரது விவசாய நிலத்தில் தங்கி யோகா பயிற்சிகள் செய்து வந்துள்ளார். சிலருக்கு யோகாவும் கற்று கொடுத்து வந்துள்ளார். மே மாதம் 1927ல் பிறந்த இவர் ஆரம்பத்தில் நிலச்சுவான்தாரராக இருந்தவர். வயது முதிர்ந்த தருவாயில் யோகா, உடற்பயிற்சி, தியானம் போன்றவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள ஆரம்பித்தார்.

தொடர்ந்து இயற்கை மருத்துவத்தில் ஆர்வம் கொண்ட இவர் இயற்கை மூலிகைகளை வைத்து பல்வேறு வியாதிகளுக்கு மருந்து தயாரித்து வழங்கி வந்துள்ளார். இதனால் அப்பகுதியில் பிரபலம் அடைந்து அவர் ‘செஞ்சி சாமியார்’ என்றும் அழைக்கப்பட்டார். கோவிந்தசாமி செஞ்சி சாமியாராக மாறியதுடன் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பே தனது உடலை அடக்கம் செய்வதற்காக தனக்கு சொந்தமான நிலத்திலேயே கோயில் போன்ற அமைப்புடன் சமாதி ஒன்றை அவரே கட்டி வைத்தார்.

கோவிந்தசாமியின் பிள்ளைகள் தனது தந்தை மீது கொண்ட அன்பால் இதற்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லையாம். ஜீவசமாதி அடைய ஆசைப்பட்ட அவருக்கு அரசு அனுமதி இல்லை என்பதை அறிந்தவுடன் தன் நான்கு பிள்ளைகளை அழைத்து தான் இறந்தவுடன் உடனடியாக தான் கட்டி வைத்திருக்கும் சமாதிக்குள் தன் உடலை வைத்து வழக்கம்போல் எல்லாருக்கும் மண்ணைத் தள்ளி மூடுவது போல் மூடாமல் கற்பூரம், திருநீறு, வில்வ இலை உள்ளிட்ட பல்வேறு மூலிகை பொருட்களை வைத்து அடக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

அதனடிப்படையில் 98 வயதை பூர்த்தி அடைந்த இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை குறைந்து இறக்கும் தருவாயில் இருந்துள்ளார். இதனிடையே அவர் தன் பிள்ளைகளை அழைத்து தன் அடக்கம் குறித்த செய்தியை கூறிவிட்டு யாருடனும் பேசாமல் எந்த ஆகாரமும் எடுத்துக் கொள்ளாமல் மவுன விரதம் இருக்க ஆரம்பித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் அவர் மரணம் அடைந்துள்ளார். கோவிந்தசாமியின் மகன்கள் கோவிந்தசாமியின் இறப்பு குறித்து உறவினர்கள், கிராமத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

மேலும் ஒரு நாள் மட்டும் அவரது உறவினர்களின் பார்வைக்காக நேற்று வைக்கப்பட்டிருந்தது. அவரது உடல் சிவ ஆச்சாரியார்கள் பூஜை செய்து சிவன் குறித்த பாடல்கள் பாடி இந்து முறைப்படி நேற்று மாலை உறவினர்கள், கிராமத்தினர் முன்னிலையில் கோவிந்தசாமியின் விருப்பபடியே தனக்குத்தானே கட்டி வைத்திருந்த சமாதியில் உறவினர்கள் கதறி அழதபடி புதைத்தனர். இயற்கை மருத்துவர் கோவிந்தசாமியின் இறப்பும் இழப்பும் உறவினர்களிடையேயும் அப்பகுதி மக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.