Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

உடனடியாக போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள ஈரான் மீதான தாக்குதல்களை ரத்து செய்தார் அதிபர் டிரம்ப்: மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க வாய்ப்பு

வாஷிங்டன்: உடனடியாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொண்டால், ஈரான் மீது நடக்க இருக்கும் தாக்குதல்களை ரத்து செய்வதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்கா-ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28ம் தேதி போர் தொடங்கிய நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் சிக்கலாகி உள்ளது. போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், இரு தரப்பும் மீண்டும் மோதலில் ஈடுபட்டதால் மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

ஹார்முஸ் ஜலசந்தியில் அனுமதியின்றி செல்லும் கப்பல்களை ஈரான் தாக்குவதால், அந்நாட்டின் ராணுவ கட்டமைப்புகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்துகிறது. இதற்கு பதிலடியாக, ஜோர்டான் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே, ஈரானின் எண்ணெய் கட்டமைப்புகள், எரிசக்தி நிலையங்கள் மீது கடும் தாக்குதல் நடத்தப் போவதாக அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார்.

இது வளைகுடா நாடுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது. ஈரான் மீது அமெரிக்கா கடும் தாக்குதல் நடத்தினால், மற்ற வளைகுடா நாடுகள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தும். இது வளைகுடா நாடுகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், அதிபர் டிரம்ப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கவலை தெரிவித்தார்.

இந்நிலையில், ஈரான் மீது நடத்த இருந்த கடும் தாக்குதலை ரத்து செய்வதாக அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்தார். அவர் தனது சமூக ஊடக பதிவில், ‘‘ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக, முழுமையாக, முற்றிலுமாக திறப்பது, அணுசக்தி அச்சுறுத்தலுக்கு முடிவு கட்டுவது உள்ளிட்ட அம்சங்களுடன் கூடிய போர் நிறுத்த ஒப்பந்தத்தின் வரையறைகளை மத்திய கிழக்கில் உள்ள நட்பு நாடுகள் எட்டி உள்ளன.

அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில், உலகின் எதிர்கால நலனுக்காவும், ஈரானின் நலனுக்காகவும் விரைவாக ஒரு ஒப்பந்தத்தை எட்ட முடிந்தால், தாக்குதலை ரத்து செய்ய நான் ஒப்புக் கொள்கிறேன்’’ என தெரிவித்துள்ளார். டிரம்பின் இந்த அறிவிப்பு மூலம் அமெரிக்கா-ஈரான் இடையே பேச்சுவார்த்தைகக்கான முட்டுக்கட்டை விலகி உள்ளது. இதனால் மீண்டும் இருதரப்பில் பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இது ஒன்றும் ஆச்சரியமில்லை

டிரம்பின் அறிவிப்பை பார்த்து ஆச்சரியப்படவில்லை என்றும், அமெரிக்காவிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களை உறுதியாக எதிர்கொண்டு தொடர்ந்து விழிப்புடன் இருப்பதாகவும் ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.