Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நீதிமன்றங்களில் பல்வேறு காரணங்களால் இழுத்தடிப்பு; சிபிஐ பதிவு செய்த 7,229 ஊழல் வழக்குகள் தேக்கம்: மத்திய கண்காணிப்பு ஆணைய அறிக்கையில் தகவல்

புதுடெல்லி: சிபிஐ அமைப்பால் விசாரிக்கப்பட்ட 7,229 ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகள் பல ஆண்டுகளாக நீதிமன்றங்களில் தீர்ப்பின்றி நிலுவையில் உள்ளதாக மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) வெளியிட்டுள்ள 2025ம் ஆண்டுக்கான சமீபத்திய ஆண்டறிக்கையில், சிபிஐ அமைப்பால் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட வழக்குகளின் நிலவரம் குறித்த முக்கிய புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரையிலான நிலவரப்படி, நாடு முழுவதும் மொத்தம் 7,229 ஊழல் வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் தீர்ப்பு வராமல் நிலுவையில் உள்ளன. இதில் அதிர்ச்சியளிக்கும் விதமாக 409 வழக்குகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவுக்கு வராமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன. மேலும், 3 ஆண்டுகளுக்கு உட்பட்டவை 1,612 வழக்குகளாகவும், 3 முதல் 5 ஆண்டுகள் வரை நிலுவையில் உள்ளவை 860 வழக்குகளாகவும், 5 முதல் 10 ஆண்டுகள் வரை உள்ளவை 1,901 வழக்குகளாகவும், 10 முதல் 20 ஆண்டுகள் வரை முடிவடையாமல் உள்ளவை 2,447 வழக்குகளாகவும் உள்ளன.

கீழமை நீதிமன்றங்கள் மட்டுமின்றி, உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்திலும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட 14,083 மேல்முறையீடு மற்றும் மறுஆய்வு மனுக்கள் பல ஆண்டுகளாகத் தேங்கிக் கிடக்கின்றன. இவற்றில் 3,161 மனுக்கள் 10 முதல் 15 ஆண்டுகளாகவும், 1,347 மனுக்கள் 15 முதல் 20 ஆண்டுகளாகவும், 739 மனுக்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாகவும் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் தாமதமாவதற்கான முக்கிய காரணங்களையும் சிவிசி அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக, சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் உரிய ஆவணங்களை விரைந்து தராமல் தாமதிப்பது, சிக்கலான பொருளாதாரக் குற்றங்களில் வங்கிக் கணக்கு ஆவணங்களை ஆய்வு செய்ய அதிகக் காலம் ஆவது மற்றும் தொலைதூர சாட்சிகளை வரவழைத்து விசாரிப்பதில் உள்ள நடைமுறைச் சிரமங்கள் ஆகியவை காரணமாகக் கூறப்பட்டுள்ளன. மேலும், சிபிஐ அமைப்பில் அனுமதிக்கப்பட்ட 7,300 பணியிடங்களில் 1,088 இடங்கள் காலியாக இருப்பதும், அதில் 672 உயர் அதிகாரிகள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதும் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

வழக்குகள் நிலுவையில் உள்ள போதிலும், நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்ட வழக்குகளில் சிபிஐ அமைப்பின் தண்டனை விகிதம் அதிகரித்துள்ளது. அதன்படி, 2024ம் ஆண்டில் 69.14 சதவீதமாக இருந்த தண்டனை விகிதம், 2025ம் ஆண்டில் 71.71 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த 2025ம் ஆண்டில் நீதிமன்றங்கள் சிபிஐ தொடர்ந்த 1,022 வழக்குகளில் தீர்ப்பளித்ததில் 583 வழக்குகளில் குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைத்துள்ளது; 193 பேர் விடுவிக்கப்பட்டனர் மற்றும் 37 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அதேபோல், கடந்த ஆண்டில் மட்டும் சிபிஐ 1,005 புதிய வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. இதில் 855 அரசு ஊழியர்கள் சம்பந்தப்பட்ட 615 ஊழல் வழக்குகள், 265 லஞ்ச ஒழிப்பு வழக்குகள் மற்றும் வருமானத்திற்கு அதிகமாக 81 சொத்துக் குவிப்பு வழக்குகள் ஆகியவை அடங்கும் என்று சிவிசி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.