பரமத்திவேலூர்: நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே பிலிக்கல்பாளையம் நகப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ராஜ் மகன் வினீத் (21). இவர், குமாரபாளையம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 4ம் ஆண்டு பி.இ., ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்தார். அவருடன், தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த தேவராஜ் மகன் நந்தகுமார்(21), ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷேக் பிஸ்ருல்லா மகன் ஷேக் பைல் ரஹ்மான்(21) ஆகியோர் படித்து வந்தனர். 3 பேரும் நண்பர்கள்.
விடுமுறை தினமான நேற்று முன்தினம், நகப்பாளையத்தில் உள்ள வினீத் வீட்டிற்கு வந்திருந்தனர். மாலை 3 மணியளவில் மூவரும், காவிரி ஆற்றில் குளிப்பதற்காக சென்றவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் காவிரி ஆற்றில் தேடும் பணி நடந்தது. பல மணி நேரம் தேடுதலுக்கு பின் நேற்று காலை 9 மணியளவில், குளித்த இடத்தில் இருந்து, சுமார் 400 மீட்டர் தொலையில் 3 பேரும் சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 3 பேரின் உடல்களையும் தீயணைப்பு துறையினர் உதவியுடன் போலீசார் மீட்டனர்.


