Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை

சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு ஆணையிட்ட பிறகும் கூட காவிரியில் நீர் திறந்துவிடாத கர்நாடக அரசின் தமிழர் விரோதப் போக்கு அதிர்ச்சியளிக்கிறது. ஒழுங்காற்றுக் குழுவையும் அவமதிக்கும் வகையில் நடந்து கொள்ளும் கர்நாடக அரசின் இப்போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டிக்கிறோம்.

கர்நாடக அரசின் இத்தகைய பிடிவாதப் போக்கினால் தமிழ்நாட்டின் டெல்டா பகுதி முழுவதும் விவசாயம் பாதிக்கப்பட்டுப் பாலைவனமாக மாறிவிடும் ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது.“தமிழ்நாட்டுக்கு கர்நாடகா திறந்து விட்டுள்ள நீர் இதுவரை ஒட்டுமொத்தமாக ஒரு டி.எம்.சி. அடி (tmcft) அளவைக்கூட எட்டவில்லை” என்று காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் (CWRC) தலைவர் வினீத் குப்தா கூறியுள்ளார். “2018-இல் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி பிலிகுண்டுலுவில் கிடைக்கப்பெற வேண்டிய அளவு 27.2 டி.எம்.சி. அடியாக இருந்த நிலையில், ஜூலை 27 வரையிலான நிலவரப்படி அங்கு 0.6 டி.எம்.சி. அடி மட்டுமே வந்து சேர்ந்திருக்கிறது.

ஜூன் முதல் நாள் முதல் நீர் வரத்தில் ஏற்பட்ட ஒட்டுமொத்தப் பற்றாக்குறை சுமார் 33 டி.எம்.சி. அடியாகும். நிர்ணயிக்கப்பட்ட அளவான 36.4 டி.எம்.சி. அடியுடன் ஒப்பிடுகையில், ஜூன் 01 முதல் ஜூலை 27 வரை பிலிகுண்டுலுவில் பெறப்பட்ட நீரின் அளவு சுமார் 3.6 டி.எம்.சி. அடி மட்டுமே. அதாவது 10% மட்டுமே” என அவர் தெரிவித்துள்ளார். இப்போது காவிரி மேலாண்மை வாரியம் அடுத்துவரும் 15 நாட்களுக்கு 3500 கியூசெக் நீரைத் திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு ஆணையிட்டுள்ளது. ஆனால், அதையும் கொடுக்கக்கூடாது என கர்நாடக மாநில விவசாயிகள் போராடுகின்றனர். குறுவை சாகுபடி இல்லாமல் போய்விட்டது.

சம்பா சாகுபடியும் செய்ய முடியாத நிலையில் தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் ஒட்டுமொத்த விவசாயமும் கேள்விக் குறியாகி உள்ளது. இனியும் கர்நாடகா அரசு நமக்கு நியாயம் செய்யும் என நம்புவதற்கு இடமில்லை. எனவே, தமிழ்நாட்டின் சார்பில் நாம் நமது நியாயமான குரலை உரத்து வெளிப்படுத்த வேண்டும். இந்நிலையில் தமிழ்நாடு அரசு உடனே அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.