Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

முன்கூட்டியே காவிரியில் நீர் திறக்க அதிக வாய்ப்பு குறுவை சாகுபடி முன்னேற்பாடு பணிகளுக்கு கை கொடுத்த மழை

* ஏர் உழவு, விதைநேர்த்தியில் விவசாயிகள்

* முழுவீச்சில் விவசாய வேலைகள் மும்முரம்

தஞ்சாவூர் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் டெல்டா பாசனத்திற்காக முன்கூட்டியே அணை திறக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

மேட்டூர் அணை நீரைக்கொண்டு தமிழகத்தின் 12 மாவட்டங்களும், காரைக்கால் பகுதியும் பயனடைகின்றன. இம்மாவட்டங்களில் மொத்தம் சுமார் 20 லட்சம் ஏக்கரில் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.

ஆண்டுதோறும் மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி சாகுபடிக்காக திறக்கப்படுவதும் சாகுபடி பணிகள் முடிந்து ஜனவரி 28ம் தேதி மூடப்படுவதும் வழக்கமாகும்.

ஆனாலும் நீர் இருப்பு, நீர்வரத்து, பருவ மழை போன்ற காரணங்களை பொறுத்து மேட்டூர் அணை திறப்பு தேதி நிர்ணயிக்கப்படுகிறது. கடந்தாண்டு ஜூலை 27ம் தேதி மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கப்பட்டது.

மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால் கடந்த பல ஆண்டுகளாக காலம் தாழ்ந்து திறக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டும் காலம் தாழ்ந்து திறக்கப்பட்டது. எனினும் நிர்ணயிக்கப்பட்ட பரப்பை விட கூடுதலாக நெல் சாகுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு உள்ளது. இதனால் வழக்கமான தேதியான ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரம் முன்பு வரை 108 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி 111 அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 13245 கன அடியாக உயர்ந்துள்ளது.

அணையின் நீர் இருப்பு 79.850 டி.எம்.சி.யாகும்.காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து கணிசமாக உயர்ந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் அணை விரைவில் நிரம்பும் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு நீர்வரத்து உயர்ந்து அணை நிரம்பும் என்ற நிலை ஏற்படும் பட்சத்தில் டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12ம் தேதிக்கு முன்னதாகவே அணை திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலைகளில் கடந்த காலங்களில் அணை நீர்வரத்து மற்றும் அணையின் பாதுகாப்பு கருதி ஜூன் 12ம் தேதிக்கு முன்னதாகவே மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு ஜூன் 6ம் தேதியும், 2022ம் ஆண்டு மே 24ம் தேதியும் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு மேட்டூர் அணை முன்னதாக திறக்கப்பட்டால் சுதந்திர இந்தியாவில் மூன்றாவது முறையாக மேட்டூர் அணை முன்னதாகவே திறக்கப்பட்டது என்ற சாதனையை எட்டும்.

மேட்டூர் அணை டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படுவது உறுதியாகியுள்ள நிலையில் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் சாகுபடிக்கு முன்னேற்பாடு பணிகளை துவங்கி விட்டனர். தஞ்சாவூர்,பாபநாசம், ஒரத்தநாடு, நன்னிலம், நீடாமங்கலம், மயிலாடுதுறை போன்ற பகுதிகளில் சாகுபடிக்கு தேவையான பணிகளை துவங்கி விட்டனர்.

மேலும் தற்போது பெய்து வரும் மழை குறுவை முன்னேற்பாடு பணிகளுக்கு கை கொடுத்துள்ளது. இயற்கை உரங்கள், மாட்டு சாணம் போன்றவைகளை வயல்களில் பரப்பி உழவு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் குறுவை சாகுபடிக்கு தேவையான விதை நெல்லில் விதை நேர்த்தி செய்து விதைக்கும் பணியை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். மேட்டூர் அணை திறப்பது உறுதியாகி உள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் நடப்பாண்டில் குறுவை சாகுபடி முழு வீச்சில் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.