Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தண்ணீர்.. கண்ணீர்...

50ஆண்டுகளுக்கு முன் காவிரி ஆற்றின் பாசனத்தை நம்பியே டெல்டா விவசாயிகள் முப்போகம் சாகுபடி செய்வார்கள். இதனால் தான் ‘‘தமிழகத்தின் நெற்களஞ்சியம்” தஞ்சாவூர் என அழைக்கப்பட்டது. மாநிலத்தின் தேவை மட்டுமின்றி வட மாநிலங்களுக்கும் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பொங்கிப் பெருகி வந்த காவிரி ஆற்றில் தஞ்சாவூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையில் ஆற்றின் குறுக்கே கல்லணையைக் கட்டி விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்திய மன்னன் தான் கரிகாலசோழன். மாடு கட்டி போரடித்தால் மாளாது என்பதால், யானை கட்டி போரடித்த நாடு தான் சோழநாடு. சோழநாடு சோறுடைத்து என்ற பழமொழிக்கு ஏற்ப விவசாயம் தழைத்து ஓங்கும். மாறி வரும் பருவநிலை மாற்றம் காரணமாக பெய்யும் மழையும் குறைந்தது. இதனால் விவசாயிகள் ஆழ்குழாய் கிணறு பாசனத்துக்கு மாறினார்கள். முப்போகத்தில் இருந்து குறுவை, சம்பா சாகுபடி என இரண்டு போக சாகுபடிக்கு தள்ளப்பட்டார்கள்.

இந்தாண்டு விவசாயிகளின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. ஒருபோக சாகுபடியான சம்பா சாகுபடிக்கு தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள். தற்போது 25 கிலோ அரிசி மூட்டை ரூ.200 உயர்ந்துள்ளது. சம்பா சாகுபடியும் பொய்த்து போனால் அடுத்த ஆண்டு அரிசி மூட்டைகள், வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். மேலும் அரிசி விலையும் விண்ணை முட்டும் என விவசாய வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். கடந்த 5 ஆண்டு மு.க.ஸ்டாலின் ஆட்சியில், தண்ணீர் திறக்க கர்நாடகா முரண்டு பிடித்ததால் உடனடியாக சட்ட நடவடிக்கைகளை எடுத்து தண்ணீர் திறந்ததில் இரண்டு போக சாகுபடியை செய்தனர்.

தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக விஜய் உள்ளார். அரசியல் நுணுக்கங்களும், விவசாயிகளின் வறிய நிலையும் அவருக்கு ெதரியவில்லை. 90சதவீத விவசாயிகளுக்கு, விவசாயத்தை தவிர வேறு தொழில் தெரியாது. விவசாயிகளின் பல்வேறு போராட்டங்களுக்கு இடையே ரூ.75,000 - ரூ.1 லட்சம் வரை கடன் பெற்றவர்களுக்கு ரூ.75,000 வரையும், ரூ.1 லட்சத்துக்கும் மேல் பெற்றவர்களுக்கு ரூ.35,000 வரை கடன் தள்ளுபடி என சட்டமன்றத்தில் நேற்று 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். தற்போது இரண்டு சாகுபடியும் பொய்த்து போனதால் விவசாய கடன்களை முழுமையாக, அதாவது தவெகவின் தேர்தல் அறிக்கையில் கூறியபடி தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது தான் விவசாயிகளின் அழுத்தமான கோரிக்கையாக உள்ளது.

இதற்கிடையில் காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. அப்போது கடுமையான விமர்சனம் செய்த தவெக,பல்வேறு எதிர்ப்பு கிளம்பியவுடன் தமிழக அரசும் வழக்கு தொடர்ந்தது. இந்த இரண்டு வழக்குகளின் விசாரணை நேற்று வந்தபோது காவிரி ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கான நீரை கர்நாடக அரசு திறக்காதது ஏன்?, கடவுள் கொடுத்த மழையை முழுமையாக தேக்கி வைக்க முடியாது, அதனால் தானே திறந்து விட்டீர்கள். காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு படி, தமிழகத்திற்கு நீர் திறக்க வேண்டும் என கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்து இருக்கிறது.

விவசாயிகளின் நலனில் எப்போதும் அக்கறையுடன் இருக்கும் திமுக, எதிர்க்கட்சி என்றாலும் உச்சநீதிமன்றத்துக்கு சென்று இந்த உத்தரவை பெற்றுள்ளது. விவசாய நலனில் அக்கறை இருப்பது போன்று ரீல்ஸ் விடாமல் ரியலாக தமிழக அரசு இருந்தால் தான் விவசாயிகளின் கண்ணீரை துடைக்க முடியும் என்பது தான் எதார்த்தமான உண்மை.