நேபாள வெள்ளப்பெருக்கில் பலியானோர் எண்ணிக்கை 362 ஆக உயர்வு; 86 தமிழர்களை பற்றி தகவல் தெரியாததால் பீதி: 2 நாட்களாக தொடர்புகொள்ள முடியாததால் குடும்பத்தினர் கண்ணீர்
புதுடெல்லி, ஆக. 28: நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 362 ஆக அதிகரித்துள்ளது. 288 இந்தியர்கள் இன்னும் காணவில்லை என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. புனித யாத்திரைக்காக நேபாளம் சென்ற 21 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 86 பேரை காணவில்லை. 2 நாட்களாகியும் அவர்களை செல்போனில் தொடர்பு கொள்ள முடியாததால் உறவினர்கள் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். காணாமல் போன தமிழர்களின் கதி என்ன என்பது பீதியை ஏற்படுத்தி உள்ளது. திபெத் எல்லையில் தொடங்கி நேபாளத்தின் போட்டே கோஷி ஆற்றில் நேற்று முன்தினம் காலை திடீரென பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கோஷி ஆற்றின் கிளை நதியான லெண்டேவின் நீரோட்டத்தை தடுத்திருந்த பனிப்பாறை சரிந்ததால் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கலாம் என கணிக்கப்படுகிறது. இது முதலில் சீனாவுடனான நேபாள எல்லையான ரசுவாகதியிக்கு அருகில் உள்ள திமுரே பகுதியை தாக்கி, ரசுவா, நுவாகோட் உள்ளிட்ட பல மாவட்டங்களை சின்னாபின்னமாக்கியது. ஏராளமான பாலங்கள், நீர்மின் திட்ட கட்டுமானங்கள், வீடுகளை இழுத்துச் சென்ற இந்த காட்டாற்று வெள்ளம் 80க்கும் மேற்பட்ட பஸ், கார் உள்ளிட்ட வாகனங்களையும் சூறையாடியது. நேபாள வரலாற்றில் மிக மோசமான பேரழிவை ஏற்படுத்திய இந்த வெள்ளத்தில் ஏராளமான இந்தியர்கள் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் மாயமாகி உள்ளனர்.
அவர்களை தேடும் பணி மற்றும் மீட்பு நடவடிக்கைகளை நேபாள ராணுவம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், நேபாள வெள்ளத்தில் சிக்கிய இந்தியர்கள் விவரம் தொடர்பாக டெல்லியில் பேட்டி அளித்த இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: நேபாள வெள்ளத்தில் மொத்தம் 288 இந்தியர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களை இதுவரையிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. காணாமல் போன இந்தியர்களில் நீர்மின் திட்டங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அடங்குவர். திரிசூலி ஒன் மின் திட்டத்தில் பணிபுரியும் 73 இந்தியர்கள் மாயமாகி உள்ளனர். இவர்களைப் பற்றிய கூடுதல் விவரங்களைப் பெற காத்மாண்டுவில் உள்ள நமது தூதரகம் திட்டத் தலைவருடன் தொடர்பில் உள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு 57 மற்றும் 49 பேர் கொண்ட 2 தனித்தனிக் குழுக்கள் சென்றுள்ளன. அவர்களில் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தை சேர்ந்த 32 இந்தியர்கள் அடங்கிய குழுவும், மற்ற மாநிலங்களைச் சேர்ந்த 61 இந்தியர்களும், கேரளாவைச் சேர்ந்த 33 பேரும் திமுரே பகுதியில் இருந்ததாக தகவல் கிடைத்துள்ளது. அவர்களை தேடும் பணி நடக்கிறது. திபெத் பகுதியில் சிக்கிய சுமார் 200 இந்தியர்கள் எங்களிடம் உதவி கோரியுள்ளனர். அவர்களில் 95 பேர் கார்சான் பகுதியில் இருந்து நேபாளத்திற்குள் நுழையத் தயாராகி வருவதாகவும், 4 பேர் கீலாங் நகரிலும், 13 பேர் ஜுதுல்புக் பகுதியிலும் இருக்கின்றனர். இந்தியர்களை மீட்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இந்தியா தொடர்பில் இருக்கிறது.
இந்தக் கடினமான நேரத்தில் இந்தியா நேபாளத்துடன் உறுதுணையாக நிற்கிறது; அந்நாட்டின் தேவைக்கேற்ப அனைத்து உதவிகளையும் வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், உயர் அதிகாரிகள் மற்றும் காத்மாண்டு மற்றும் பீஜிங்கில் உள்ள இந்தியத் தூதர்களுடன் உயர்மட்டக் கூட்டத்தை நடத்திய பிறகு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ள இந்தியர்களின் நிலை மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்த ஒன்றிய அரசு அவசர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறினார். ஜெய்சங்கர் அளித்த பேட்டியில், ‘‘மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் இரண்டிலும் நாங்கள் நேபாளத்துடன் நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வருகிறோம்.
நேற்று முன்தினம் 10 டன் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்ட நிலையில், நேற்று (வியாழக்கிழமை) 37.5 டன் நிவாரணப் பொருட்களை ஏற்றிய ராணுவ போக்குவரத்து விமானம் நேபாளத்திற்கு புறப்பட்டுள்ளது. நிவாரணப் பணிகளுக்கு நாங்கள் தொடர்ந்து வலுவான ஆதரவை அளிப்போம்’’ என்றார். இதற்கிடையே, நேபாளத்தில் நேற்று மேலும் 93 உடல்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, பலி எண்ணிக்கை 362 ஆக உயர்ந்துள்ளதாக நேபாள காவல்துறை தெரிவித்தது. காயமடைந்தவர்கள் உட்பட சிக்கித் தவித்த 800க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக நேபாள காவல் துறை செய்தித் தொடர்பாளர் அபி நாராயண் கப்லே தெரிவித்தார்.
வெள்ளத்தில் சுமார் 1,500 பேர் காணாமல் போயிருப்பதாகவும் அவர்களில் 300 பேர் இந்தியர்கள் என்றும் நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிசிர் கனால் நேற்று தெரிவித்தார். மிகவும் அதிகம் பாதிக்கப்பட்ட ரசுவா பகுதியில் மட்டும் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதையும், ஆயிரக்கணக்கானோர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதையும் கனால் உறுதிப்படுத்தினார். ‘‘ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை இழந்துள்ளன. பலரும் காணாமல் போயுள்ளனர். பேரிடரின் முழு அளவை நாங்கள் இன்னும் கண்டறிய முயற்சித்து வருகிறோம்’’ என்று அமைச்சர் கனால் கூறினார். இதற்கிடையே, நேபாள பிரதமர் பலேந்திர ஷா நேற்று நுவாகோட் மாவட்டத்தின் பிதுர் நகராட்சிக்குச் சென்று திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.
இந்த வெள்ளத்தில், நேபாள ராணுவத்தை சேர்ந்த குறைந்தது 44 பேர், நேபாள காவல்துறையைச் சேர்ந்த 28 பேர் மற்றும் ஆயுதமேந்திய காவல் படையைச் சேர்ந்த 13 பேர் ஆகியோரும் மாயமாகி உள்ளனர். பல்வேறு நீர்மின் நிலையங்கள் மற்றும் சுங்க அலுவலகங்களில் பணிபுரிந்த சுமார் 162 பேரும் காணாமல் போயுள்ளனர். 33 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர் உட்பட 579 சுற்றுலா பயணிகள் காணாமல் போயுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து 2வது நாளாக மீட்பு பணிகள் நேற்றும் நடந்தன.
இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 86 பேர் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை என்பது தமிழ்நாட்டில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. 2 நாட்களாகியும் அவர்களை செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதால் உறவினர்கள் கண்ணீருடன் தவிக்கின்றனர்.
ஐநா, அமெரிக்கா அவசர நிதி உதவி
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான திடீர் வெள்ளப் பாதிப்புகளுக்காக, ஐக்கிய நாடுகள் சபை 1.7 மில்லியன் யூரோக்களையும் (ரூ.18.5 கோடி), அமெரிக்க அரசு 5 லட்சம் டாலர்களையும் (ரூ.4.2 கோடி அவசர நிதியுதவியாக அறிவித்துள்ளன.
அடுத்த 72 மணி நேரத்தில் ஆபத்து சீனா எச்சரிக்கை
இமயமலையில் பனியால் உறைந்த மற்றொரு தற்காலிக தடுப்பு ஏரி அடுத்த 72 மணி நேரத்தில் உடையும் நிலையில் இருப்பதாக சீனா எச்சரித்துள்ளது. சீன அரசு ஊடகங்களில் வெளியான அத்தகவலில், ஏற்கனவே பேரழிவு நிகழ்ந்த இடத்திற்கு வடகிழக்கில், சோசென் கோலா மற்றும் புரேபு சாங்போ ஆறுகள் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ள அந்த ஏரி நேற்றைய நிலவரப்படி 2 மில்லியன் கனமீட்டர் நீர் கொள்ளளவுடன் நிரம்பி வழிவதாகவும், அடுத்த 72 மணி நேரத்தில் மேலும் 3 மில்லியன் கனமீட்டர் நீர் ஏரிக்குள் பாயும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் சீன நீர்வள அமைச்சகம் எச்சரித்துள்ளது.
30 நாடுகளை சேர்ந்தவர்கள் மாயம்
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவில் 30 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பலர் காணாமல் போயுள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது. நேபாள சுற்றுலா துறை வெளியிட்ட அறிக்கையில் வெளிநாட்டினர் 517 பேர் மாயமாகி உள்ளனர் என்று தெரிவித்தது.சீனாவில் உள்ள கியோரெங் நகரில் 558 வெளிநாட்டினர் மாயமாகி உள்ளனர் என்று சீனாவின் தொலைக்காட்சி ஒன்று தெரிவித்தது.மேலும் நேபாள பகுதிக்கு சென்ற 100 சீனர்களும் மாயமாகி உள்ளனர் என்று சீன தொலைக்காட்சி தெரிவித்தது. அமெரிக்கா, மலேசியா, உக்ரைன்,ஆஸ்திரேலியா உள்ளிட்ட 30 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பலர் மாயமாகி உள்ளனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் புனித தலங்களை தரிசிக்கவும், மலையேற்றத்தில் ஈடுபடுவதற்காகவும் அங்கு சென்றுள்ளனர்.
கோர வெள்ளத்தை நேரில் கண்டவர் அதிர்ச்சி பேட்டி
நேபாள வெள்ளத்தில் எல்லை மாவட்டமான ரசுவாவில் உள்ள திமுரே பகுதியை சேர்ந்த கிரிலால் என்பவரின் மனைவி, மகன், மகள்கள் உட்பட 5 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கிரிலால் என்ற டிரைவர் கூறுகையில், பேரழிவு ஏற்பட்ட போது நிலநடுக்கம் ஏற்பட்டது போல் உணர்ந்தேன். வெள்ளத்திற்கு குடும்பத்தையே இழந்தேன். இதில் எதுவும் மிஞ்சவில்லை என்றார். மருத்துவமனைகளில் காணாமல் போன தங்கள் உறவினரின் புகைப்படங்களுடன் மருத்துவமனைகளில் பலர் காத்து நிற்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
திபெத்தில் 558 பேர் மாயம்: சீனா தகவல்
திபெத்தின் நேபாள எல்லைப்பகுதிக்கு அருகில் உள்ள கியிரோங் கவுண்டியில் உள்ள கியிரோங் நகரை திடீர் வெள்ளப்பெருக்கு தாக்கியது. இதனால் திபெத்தில் சீனா-நேபாள எல்லைப்பகுதிக்கு அருகில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்கள் வழியாக இந்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலச்சரி மற்றும் வெள்ளத்தில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் 558 பேர் காணாமல் போயுள்ளதாகவும் சீன அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான சின்ஹூவா நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. கியிரோங் நகரை சீன பிரதமர் லி கியாங் நேற்று பார்வையிட்டார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் லின் ஜியான் கூறுகையில், ‘‘நேபாளத்தில் பாதிக்கப்பட்ட பகுதியில் சீனாவை சேர்ந்த சுமார் 100 பேர் காணாமல் போயுள்ளனர். நேபாள அதிகாரிகளுடன் இணைந்து சீன தூதரகம் சரிபார்த்து வருகின்றது’’ என்றார்.
40 ஹெலிகாப்டரில் உதவிப் பொருட்கள்
நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண உதவி பொருட்களை கொண்டு செல்வதற்கு 40 தனியார் ஹெலிகாப்டர்கள் இயக்கப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்தனர். விமான நிலைய அதிகாரி கூறுகையில், பிற்பகல் 2 மணி வரை 40 தனியார் ஹெலிகாப்டர்கள் மூலம் நிவாரண பொருட்கள் ஏற்றி செல்லப்பட்டன.மேலும் 20க்கும் மேற்பட்ட தனியார் ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் உள்ளன என்று பத்திரிகை தகவல் தெரிவித்தது. இதை தவிர மீட்பு பணிகளுக்காகவும், நிவாரண உதவி பொருட்கள் கொண்டு செல்லவும் நேபாள ராணுவத்தின் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மருத்துவமனையில் குவிந்த பொதுமக்கள்
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.இதற்கிடையே, வெள்ளப்பெருக்கிற்கு பின் தொடர்பு இல்லாமல் இருக்கும் உறவினர்களை கண்டறிய மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கானோர் திரண்டுள்ளதாக நேபாள பத்திரிகை தெரிவித்துள்ளது. இதையடுத்து மகாராஜ்கஞ்சில் உள்ள திரிபுவன் பல்கலைகழக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டவர்களின் பட்டியலை அதிகாரிகள் ஒட்டியுள்ளனர். அதே போல் பேரழிவில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களும் ஒட்டப்பட்டுள்ளன.சித்வான் மாவட்டம், பரத்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை மற்றும் மீட்பு பணிகளை சுகாதார அதிகாரிகள் ஒருங்கிணைத்து வருகின்றனர்.
10 டன் நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பியது
நேபாளத்திற்கு 10 டன் நிவாரண பொருட்கள் மற்றும் மருந்துகளை இந்தியா அனுப்பி உள்ளது. இந்தியா விமான படை விமானம் மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில், ‘‘நேபாளத்திற்கு உதவுவதற்காக 37.5 டன் கொண்ட நிவாரண பொட்கள், மருந்துகள் மற்றும் மருந்துகளை ஏற்றி கொண்டு விமான படையின் 2 வது விமானம் ஒன்று நேபாளத்துக்கு புறப்பட்டு சென்றுள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பெங்காலி நடிகர் சிக்கி தவிப்பு
பெங்காலி திரைப்பட நடிகர் காரஜ் முகர்ஜி நேபாளத்துக்கு சென்றுள்ளார். அவருடன் அவரது மனைவி பிரதிவா முகர்ஜியும் சென்றுள்ளார். வெள்ளத்தினால் அந்த பகுதியில் சூழ்நிலை மோசமாக இருப்பதால் அவரால் இந்தியாவுக்கு வரமுடியவில்லை. எனினும் தானும, தனது மனைவியும் பாதுகாப்பாக இருப்பதாக தனது உறவினர்களுக்கு தொலைபேசியில் பேசிய காரஜ் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
நேபாள வெள்ளத்திற்கு நிலநடுக்கம் காரணமல்ல: அமெரிக்க ஆய்வு மையம் தகவல்
திபெத்தில் இருந்து தொடங்கிய திடீர் வெள்ளம் நேபாளத்தில் நேற்று முன்தினம் பேரழிவை ஏற்படுத்திய சமயத்தில் அப்பகுதி மலையில் 4.4 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டது. ஆனால் இந்த நிலநடுக்கம் பெரும் வெள்ளத்திற்கு காரணமல்ல என அமெரிக்க ஆய்வு மையம் விளக்கி உள்ளது. பனிப்பாறை சரிவு மற்றும் குப்பைகள் கலந்த பனிப்பாறை கீழ் நோக்கி ஓடியதால் இந்த வெள்ளம் ஏற்பட்டதாக கூறி உள்ளது. கனடாவின் கால்கரி பல்கலக்கழகத்தின் இணை பேராசிரியர் டேனியல் சுகர் செயற்கைகோள் படங்களை ஒப்பிட்டு கூறுகையில், ‘‘கடந்த 24 மணி நேரத்தில் அப்பகுதியில் உள்ள பனிப்பாறைகள் கணிசமான அளவு பனியை இழந்திருப்பது தெரிகிறது.
5,200 மீட்டர் உயரத்தில் உள்ள செங்குத்து பாறையிலிருந்து பனிப்பாறை ஒன்று சரிந்து விழுந்ததே இந்த திடீர் வெள்ளத்தில் காரணமாக அமைந்தது’’ என்றார். இமயமலைப் பகுதிகளில் பனியானது பாறையாக உருவாகி ஆற்றின் குறுக்கே தற்காலிக இயற்கை அணையாக உருவாகியிருக்கும். இதன் மீது மிகப்பெரிய பனிப்பாறை சரிந்து விழுந்ததால் அது ஒட்டுமொத்த குப்பைகளுடன் கீழ்நோக்கி பாயத் தொடங்கி உள்ளது. இவ்வாறே நேபாளத்தை வெள்ளம் சூறையாடி உள்ளது.
நேபாளத்தின் குற்றச்சாட்டை மறுத்தது சீனா
திபெத் எல்லையில் வெள்ளம் வந்த உடனே நேபாளத்தை எச்சரித்திருந்தால் பல மக்களை காப்பாற்றியிருக்கலாம், சீனாவில் உள்ள இயற்கை அணை (ஆற்றின் குறுக்கே பனியால் உறைந்து இயற்கையாக அணை போல் ஏற்படும் தடுப்பு) உடைந்ததால்தான் வெள்ளம் ஏற்பட்டது என்று நேபாள மக்கள் தரப்பில் குற்றச்சாட்டப்படுகிறது. சீன தூதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘சீனாவில் உள்ள இயற்கை அணை உடைந்து நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பது போலி செய்தி. நேபாள பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் அல்லது பனிப்பாறை சரிவு காரணமாகவே கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றச்சாட்டு எதையும் சரி செய்யாது. கூட்டு முயற்சியே உயிர்களை காப்பாற்றும்’’ என கூறி உள்ளது.



