ஜாதி, மத, மொழி ரீதியாக வாக்குகளை சேகரிக்கும் நடவடிக்கைகளை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய ஆணையம் கோரி வழக்கு
* தலைமை தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: ஜாதி, மத, மொழி ரீதியாக வாக்கு சேகரிக்கும் ஊழல் நடவடிக்கையை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய சுதந்திரமான ஆணையம் அமைக்கக் கோரிய வழக்கு தொடர்பாக பதிலளிக்குமாறு தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியைச் சேர்ந்த ராஜேஷ் அனு மகிமைதாஸ் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், ஜாதி, மதம் மற்றும் மொழி ரீதியாக வாக்குகளை சேகரிப்பது ஊழல் நடவடிக்கையாகும் என்றும் வெறுப்பு பேச்சுக்களை கட்டுப்படுத்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடந்த 2017ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆனால் தேர்தல் நேரங்களிலும், தேர்தல் அல்லாத காலங்களிலும் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசியல் லாபத்துக்காக, ஜாதி, மதம், மொழி ரீதியாக வாக்காளர்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துகிறார்கள். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பிறகும், அரசியல் கட்சிகள் மக்களை பிரித்தாளுவது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது.
தேர்தல் நேரங்களில் ஜாதி, மத, மொழி ரீதியாக மக்களை பிளவுபடுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும் தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் முடிந்தவுடன் இந்த நடவடிக்கைகளை தடுக்க எந்த ஒழுங்குமுறையும் இல்லை. எனவே, உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து தூதர்களை நியமித்து, மக்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் தெரிவிக்கவேண்டும்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதைக் கண்காணிக்க, ஓய்வு பெற்ற நீதிபதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய சுதந்திரமான ஆணையத்தை அமைக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சி.குமரப்பன் அடங்கிய அமர்வு, மனுவுக்கு இரு வாரங்களில் பதிலளிக்குமாறு தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.


