Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சாதிவாரி கணக்கெடுப்பில் குளறுபடி; சமூகநீதியை சீர்குலைக்கும் அரசியல் நாடகம்: மாணிக்கம் தாகூர் கடும் குற்றச்சாட்டு

சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பை வெளிப்படைத்தன்மையின்றி நடத்தி சமூகநீதியை சீர்குலைக்க ஒன்றிய அரசு முயற்சிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.

மக்கள்தொகை விகிதாச்சாரத்திற்கு ஏற்ப விளிம்புநிலை மக்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க 50 சதவீத இடஒதுக்கீட்டு உச்சவரம்பை நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த 2023ம் ஆண்டு முதல் தொடர் வலியுறுத்தல்களை முன்னெடுத்து வருகிறார். இந்த நிலையில், அரசியல் அழுத்தங்கள் காரணமாக சாதிவாரி கணக்கெடுப்பை அறிவித்த ஒன்றிய அரசு, அதனை நடைமுறையில் திட்டமிட்டு குளறுபடிகளுடன் செயல்படுத்தி வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘உத்தரகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேச மலைக்கிராமங்களில் முறையான வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகள் இன்றி சாதிவாரி கணக்கெடுப்பு அவசரகதியில் தொடங்கப்பட்டுள்ளது. 40 கேள்விகள் கேட்கப்பட்டாலும் உரிய ஆவண சரிபார்ப்புகள் இன்றி ஆதார் விவரங்களை சரிவரப் பதியாமல் கணக்கெடுப்பு செயலியில் தகவல்கள் பதிவு செய்யப்படுவது அதிர்ச்சியளிக்கிறது’ என்று சாடியுள்ளார்.

மேலும் தொடர்ந்து தெரிவித்த அவர், ‘கடந்த 1931ம் ஆண்டு 4,147 ஆக இருந்த சாதிகளின் எண்ணிக்கை, 2011ம் ஆண்டு முறையற்ற திறந்தவெளி கேள்விகளால் 46.7 லட்சம் வகைகளாக சிதறியதாக ஒன்றிய அரசே நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது. தற்போதும் அதே குளறுபடி முறையை மீண்டும் பின்பற்றினால் பிற்படுத்தப்பட்டோரின் உண்மையான தரவுகள் சிதைந்து தமிழ்நாட்டின் 69 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்ட பல மாநிலங்களின் உரிமைகள் பறிபோகும் அபாயம் உள்ளது. எனவே பீகார் மற்றும் தெலங்கானா மாநிலங்களை பின்பற்றி, தமிழ்நாட்டின் 252 சாதிகளையும் உள்ளடக்கி அறிவியல் பூர்வமாக தரவுகளை சேகரிக்க வேண்டும். போதிய முன்னேற்பாடுகள் இன்றி நடத்தப்படும் இந்த கண்துடைப்பு நாடகத்தால் மக்களின் வரிப்பணமே வீணாகும் என்பதால், ராகுல்காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியபடி வெளிப்படையான கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.