Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முந்திரிக்காடுகள் இடையே செழித்து வளரும் பன்னீர் கரும்பு!

யானை வரும் பின்னே... மணியோசை வரும் முன்னே! என்பது போல அடுத்த வாரம் வரும் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக தற்போது பன்னீர் கரும்பு விற்பனை களைகட்ட தொடங்கிவிட்டது. பல்வேறு இடங்களில் பன்னீர் கரும்பு அறுவடை துவங்கப்பட்டுள்ள நிலையில் கடலூர் மாவட்டத்தில் கரும்பு சாகுபடிக்கு பெயர் போன குறிஞ்சிப்பாடி சுற்றுவட்டார கிராமங்களில் அறுவடைக்கான ஆயத்தப் பணிகளில் மும்முரமாகி வருகிறார்கள் விவசாயிகள். இத்தகைய சூழலில் பத்திரக்கோட்டை அருகில் உள்ள புலியூர் பகுதியில் பன்னீர் கரும்பு சாகுபடியில் ஈடுபட்டு வரும் இளையராஜா, சிவராஜ் சகோதரர்களைச் சந்தித்தோம். மூத்தவரான இளையராஜா ஐடிஐ படித்துவிட்டு, விவசாயத்தை முழுநேரத் தொழிலாக தேர்ந்தெடுத்திருக்கிறார். இளையவரான சிவராஜ் மெரைன் பயோடெக்னாலஜியில் பிஎச்டி முடித்துவிட்டு சென்னையில் உள்ள கல்வி நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக பணிபுரிகிறார். இருந்தபோதும் வாரந்தோறும் தமது பூர்வீக மண்ணுக்கு வருகை தந்து விவசாயப் பணிகளைக் கவனித்து வருகிறார். முந்திரி, வாழைத்தோப்புகள் நிறைந்த புலியூர் பகுதிக்கு நாம் சென்றபோது குடும்பம் சகிதமாக நம்மை வரவேற்ற இளையராஜாவும், சிவராஜூம் தங்கள் சாகுபடி அனுபவம் குறித்து கூற ஆரம்பித்தார்கள்.

``அருகில் உள்ள குமளங்குளம் கிராமம்தான் எங்களுக்கு பூர்வீகம். அந்தப் பகுதியில் எங்களுக்கு 5 ஏக்கர் நிலம் இருக்கிறது. எங்கள் பகுதியைச் சேர்ந்த பலருக்கு புலியூரிலும் நிலம் இருக்கும். அதன்படி எங்களுக்கு இங்கு 10 ஏக்கர் நிலம் இருக்கிறது. இந்தப் பகுதியில் முந்திரிதான் பிரதான பயிர். வானம் பார்த்த பூமியாக இருந்த இந்தப் பகுதியில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து வாழை போன்ற பயிர்களையும் சாகுபடி செய்து வருகிறார்கள்.பாரம்பரிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த நாங்களும் முந்திரி விவசாயத்தைத்தான் தொடர்ந்து செய்து வந்தோம். நிலத்தை எங்கள் அப்பா கவனித்து வந்த நிலையில், அவருக்கு ஓய்வளித்துவிட்டு நாங்கள் பொறுப்புகளை ஏற்றிருக்கிறோம். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலத்தில் நாங்கள் போர்வெல் போட்டோம். அதில் இருந்து வாழை சாகுபடி செய்ய ஆரம்பித்தோம். மாற்றுப்பயிர் ஏதாவது செய்யலாமே என நினைத்து சத்திரம் பகுதியில் அதிகளவில் செய்யப்படும் கரும்பு சாகுபடியை இங்கு தொடங்கினோம். இங்கு நன்றாகவே வரவே கரும்பு சாகுபடியைத் தொடர்ந்து செய்து வருகிறோம். 10 ஏக்கர் நிலத்தில் ஆண்டுதோறும் 2 ஏக்கரை கரும்பு சாகுபடிக்காக ஒதுக்கி விடுகிறோம்’’ என்றவர்களிடம் கரும்பு சாகுபடி நுணுக்கங்கள் குறித்து கேட்டோம்.

``கரும்பு சாகுபடியை பொதுவாக சித்திரை மாதத்தில் ஆரம்பிப்போம். அதற்கு முன்பாக நிலம் தயாரிப்பில் ஈடுபடுவோம். நடவுக்கு முன்னதாக நன்றாக 5, 6 சால் ஏர் ஓட்டுவோம். பின்பு சாணி எரு, சாம்பல் ஆகியவற்றை இட்டு ரொட்டேவேட்டர் கொண்டு கட்டியில்லாமல் மீண்டும் உழுவோம். பொல பொலவென்று இருக்கும் நிலத்தில் 3 அடி இடைவெளி விட்டு பார் அமைப்போம். அந்த பார்களின் பள்ளமான பகுதியில் கரும்பு விதைக்கரணைகளை நடுவோம். விதைக்கரணைகளை இந்தப் பகுதியில் பொதுவாக ஒன்றரை அடிக்கு ஒன்று என்ற விகிதத்தில் நடுவார்கள். விதைக்கரணைகளை நாங்களே உற்பத்தி செய்வதால் கொஞ்சம் குறைவான இடைவெளியிலேயே விதைக்கரணைகளை நடுவோம். இதனால் கூடுதலான கரும்புகள் வளர்ந்து மகசூல் கொடுக்கும். கரும்புகள் நெருக்கமாக வளர்வதால் அடிக்கடி தோகைகளை அகற்றிவிடுவோம்.

விதைக்கரணைகளை நடுவதற்கு முன்பு போரட் என்ற மருந்தை மணலில் கலந்து பாரில் தூவுவோம். அதன்பிறகு விதைக்கரணைகள் மண்ணுக்கு மேலே தெரியும் வகையில் ஊன்றி காய்ந்த மண்ணை லேசாக தூவுவோம். அதாவது விதைக்கரணைகளுக்கு நல்ல காற்றோட்ட வசதி இருக்க வேண்டும். ஊன்றிய உடனே சொட்டுநீர் பாசனம் கொடுப்போம். அதன்பிறகு 2 நாளுக்கு ஒருமுறை பாசனம் கொடுப்போம். சொட்டுநீர் என்பதால் ஒரு நாளைக்கு 2 நேரம் நீர் பாய்ச்சினாலே போதும். இவ்வாறு செய்து வர 15 நாளில் நன்றாக முளைப்பு வரும். அந்த சமயத்தில் டீப் ஜெல் என்ற மருந்தை 200 லிட்டர் நீரில் கலந்து சொட்டுநீர் மூலம் விடுவோம். இதனுடன் ஒரு மூட்டை யூரியாவையும் சொட்டுநீரில் கலந்துவிடுவோம். மேலும் 15வது நாளில் பள்ளத்தில் இருக்கும் கரும்பு வரிசைகளுக்கு மண் அணைத்து மேடாக்குவோம். இப்போது கரும்பு இருக்கும் வரிசை மேடாக இருக்கும்.

30வது நாளில் தலா ஒரு மூட்டை யூரியா, டிஏபி, பொட்டாஷ் ஆகியவற்றுடன் வேப்பம்புண்ணாக்கை கலந்து கையால் தெளிப்போம். இதேபோல் 15 நாளுக்கு ஒருமுறை டீப் ஜெல் மருந்தையும் யூரியா, டிஏபி, பொட்டாஷ் கலவையும் மாற்றி மாற்றி கொடுப்போம். 15 நாளுக்கு ஒருமுறை தோகை அகற்றுதலையும் மேற்கொள்வோம். ஒவ்வொரு முறை தோகை அகற்றும்போதும் களையெடுத்து, கரும்பைச் சுற்றி மண் அணைப்போம். இதனால் வேர் பலமாகும். 3 மாதம் வரைதான் களை வரும். அதற்கு மேல் கரும்பு நன்றாக வளர்ந்து தோகைகளை நிறைந்து நிலத்தில் வெயில் படாதவாறு மூடிவிடும். அதன்பிறகு களைகள் முளைக்காது.

கரும்பில் இலை சுருட்டுப்புழு, துளைப்புழு போன்றவற்றின் தாக்குதல் இருக்கும். அதற்கேற்றவாறு உரிய மருந்துகளை வாங்கி தெளிப்போம். இதுதவிர பெரிய அளவில் வேறு எந்த பராமரிப்பு பணியும் இருக்காது. சரியாக தை மாதம் தொடங்கும்போது கரும்புகள் அறுவடைக்கு தயாராகும். முன்பெல்லாம் வியாபாரிகளை நம்பி இருப்போம். சமீப ஆண்டுகளாக அரசு சார்பில் பன்னீர் கரும்புகள் கொள்முதல் செய்யப்படுவதால் விற்பனை குறித்த கவலை இல்லை. உரிய நேரத்தில் அரசு அலுவலர்கள் வந்து கரும்பை கொள்முதல் செய்துகொள்கிறார்கள். ஒரு கரும்புக்கு ரூ.36 என விலை நிர்ணயம் செய்கிறார்கள். ஏறக்குறைய எங்களுக்கு ஒரு கரும்புக்கு ரூ.18 முதல் ரூ.20 வரை நிச்சய வருவாய் கிடைக்கும்.

ஒரு ஏக்கர் நிலத்தில் சராசரியாக ஆயிரம் கட்டு கரும்பு மகசூலாக கிடைக்கும். ஒரு கட்டு என்பது 20 கரும்புகள் கொண்டது. அதன்படி பார்த்தால் 20 ஆயிரம் கரும்புகள் மகசூலாக கிடைக்கும். ஒரு கரும்புக்கு ரூ.18 கிடைத்தால் கூட ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் வருமானமாக கிடைக்கும். அதில் 2 லட்சம் செலவு போனாலும் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் லாபமாக கிடைக்கும்’’ என்கிறார்கள்.

தொடர்புக்கு:

இளையராஜா - 63807 04579

சிவராஜ் - 93272 79508