Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பணப்பெட்டியோடு வரிசையில் நிற்கும் இலைக்கட்சி நிர்வாகிகளுக்கு வந்த கலக்கத்தை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘சரகம் விட்டு சரகம் ஜெயில் வார்டர்கள் தூக்கி அடிக்கப்படுவதால் அவர்களது குடும்பத்தினர் ரொம்பவே மனம் கலங்கிப்போய் இருக்காங்களாமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘தமிழ்நாட்டில் சென்டிரல் ஜெயில் உள்பட 133 ஜெயில் இருக்குது.. இங்கு தோராயமாக 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வார்டர்கள், ஆபீசர்ஸ் வேலை செஞ்சிட்டு வர்றாங்க.. இவங்களுக்காக 5 சரக டிஐஜி அலுவலகம் செயல்படுது..

ஒவ்வொரு சரகத்திற்கும் 2 சென்டிரல் ஜெயில் இருக்குது.. காக்கி டிபார்ட்மெண்டை பொறுத்தவரை ஒரு போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் போலீசார் மூன்று ஆண்டுகள் முடிந்த பிறகு அருகில் உள்ள ஸ்டேஷனுக்கு பணிமாற்றம் செய்யப்படுவாங்க.. இதே முறையை ஐபிஎஸ் அதிகாரியான ஜெயில் அதிகாரியும் கொண்டுவர ரெண்டு வருடமா திட்டம் போட்டாராம்.. அதுவும் ஒரு சரகத்தில் இருந்து இன்னொரு சரகத்திற்கு மாற்றம் செய்வதுதான் அவரது முடிவாம்.. குறிப்பா, பாளையங்கோட்டை ஜெயிலில் ஒருவர் வேலை செய்கிறார் என்றால், அவரை சேலம் ஜெயிலுக்கு மாற்றம் செய்வதுதான் அவரது தீவிர திட்டமாம்..

இதன்படியே 200க்கும் மேற்பட்டோரை அதிரடியா இடமாற்றமும் செஞ்சிட்டாராம்.. இவ்வாறு நீண்ட தூரம் மாற்றினால் குழந்தைகளை படிக்க வைப்பதில் பெரும் சிரமம் ஏற்படும், ஒரு சரகத்திற்குள்ளே இருக்கும் கிளைச்சிறைகளுக்கு மாற்றலாம், அதுவும் இல்லை என்றால் அருகில் உள்ள சரகத்திற்குகூட மாற்றலாம்.. இப்படி கண்டம்விட்டு கண்டம் மாற்றினால் எவ்வாறு குடும்பம் நடத்துவது என்ற கேள்வியை ஜெயில் வார்டர்கள் முன் வச்சியிருக்காங்க..

ஆனால் அதையெல்லாம் அந்த அதிகாரி காதில் போட்டுக்கொள்ளவே இல்லையாம்.. ஒரே இடத்தில் பல ஆண்டுகள் வேலை செய்தால் கைதிகளுடன் தொடர்பு ஏற்படுது என்பதுதான் அவரது குற்றச்சாட்டா இருக்காம்.. இந்த சரகம் விட்டு சரகம் மாற்றப்பட்டுள்ளதில் வார்டர்களின் குடும்பத்தினரும் ரொம்பவே அப்செட் ஆயிட்டாங்களாம்.. இதனால ஒவ்வொருவராக நீதிமன்றத்தை நாடிக்கிட்டு இருக்காங்களாம்.. இதனால தமிழக அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காணவேண்டும் என்பதுதான் சிறை வார்டர்களின் குடும்பத்தினரின் எதிர்பார்ப்பா இருக்குதாம்.. இதற்காக குடும்பத்தோடு சென்று முறையிடவும் அவங்க முடிவு செஞ்சிருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சீட் கிடைக்குமுன்னு உறுதியா நம்பும் இலைக்கட்சி கவுன்சிலரால் பணப்பெட்டியோடு வரிசையில் நிற்கும் நிர்வாகிங்க கலக்கத்துல இருக்காங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘இலைக்கட்சி தலைவரின் ஊரில் உள்ள மாநகராட்சியில் அக்கட்சியின் கவுன்சிலர்கள் மோதிக் கொண்ட விவகாரத்தில் புது தகவல் வெளியாகிக்கிட்டு இருக்குதாம்.. மாநகராட்சி டெண்டர் விவகாரத்தில் இலைக்கட்சி தலைவரின் நெருங்கிய நிர்வாகியின் உறவினர் ஒருவர் டெண்டர் கேட்டிருந்தாராம்..

ஆனால் சட்டவிதிகளின்படி அவருக்கு கிடைக்கலியாம்.. இதனால் அதிகோபம் அடைந்த அந்த நிர்வாகி, இலைக்கட்சி கவுன்சிலர்கிட்ட சொல்லியிருக்காரு.. அவர் கூறியபடியே மாநகராட்சி கூட்டத்துல பேசி சிக்கிக்கிட்டாராம்.. ஆனால், இதெல்லாம் பூமராங் கதையென இலைக்கட்சி நிர்வாகிகளே சொல்றாங்க.. இலைக்கட்சி ஆட்சியின்போது திமுக கவுன்சிலர் ஒருத்தரு, நியாயமான கேள்வி ஒன்றை கேட்டிருக்காரு..

இதில் ஆத்திரம் அடைந்த இலைக்கட்சி கவுன்சிலர்கள் அந்த கவுன்சிலரை கொடூரமாக தாக்கினாங்களாம்.. அதோட அவரை மன்றத்தில் இருந்து விரட்டி விரட்டி அடித்து ரோட்டுக்கு கொண்டுபோய் இழுத்துப் போட்டாங்களாம்.. இத்தனை கொடுமைகளையும் அனுபவித்த அந்த கவுன்சிலரும் தற்போது அவையில் இருந்து நடந்த மோதலை தடுத்தாராம்.. இந்த நிகழ்ச்சியை பார்த்த இலைக்கட்சிகாரங்க, வினை விதைத்தவன் வினையை அறுப்பான்னு சொல்லிக்கிட்டிருக்காங்க..

அதோட இந்த மோதலில் சிக்கிய எதிர்க்கட்சி தலைவருக்கு சேலம் தெற்கு தொகுதி மேல ஒரு கண்ணு இருக்குதாம்.. தற்போதைய நிலவரப்படி தனக்குதான் சீட் கிடைக்குமுன்னு உறுதியா இருக்காராம்.. இந்த நேரத்துல நடந்த மோதல் சீட்டுக்கு ரொம்பவே கை கொடுக்கும் என நம்புறாராம்.. இதனால பணப்பெட்டிகளோடு வரிசையில் நிற்கும் இலைக்கட்சி நிர்வாகிகளுக்கு சற்று கலக்கம் ஏற்பட்டிருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘காக்கிகள் நிலையத்தில் பெண் சித்ரவதையில் கணவர் உயிரிழந்த விவகாரத்தில் போர்க்கொடி தூக்கிய உறவுகளால் சர்ச்சையில் சிக்கி இருக்கிறாராமே ஒரு பெண் அதிகாரி..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘யூனியனான புதுச்சேரி காக்கியில் மகளிர் சர்ச்சையில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறதாம்.. ஏற்கனவே அழகில் மகாபிரபுவாக உலாவிய பெண் அதிகாரி, அடுத்தடுத்து புகார்களில் சிக்கி நீதிமன்றம் வரை பிரச்னை சென்றதாம்.. அரசியல் பின்புலம் இருந்ததால் அம்மணியை உடனே நகர்த்த முடியவில்லையாம்.. தற்போது மேலும் ஒரு பெண் அதிகாரி மீது புகார் எழுந்துள்ளதாம்..

அதாவது காக்கி நிலையத்தில் பெண் ஒருவர் விசாரணை பெயரில் சித்ரவதை செய்யப்பட்டதால் மனஉளைச்சலில் கணவர் உயிரிழந்தாராம்.. இந்த விவகாரம் மிகுந்த சர்ச்சையான நிலையில், அதிகார துஷ்பிரயோகம் செய்த பெண் அதிகாரி மீது நடவடிக்கை கேட்டு, உடலை வாங்காமல் உறவுகளுடன் போர்க்கொடி தூக்கினாராம் பாதிக்கப்பட்ட பெண். உயர் அதிகாரிகள் தலையிடவே ஒருவழியாக பிரச்னை தற்காலிக முடிவுக்கு வந்துள்ளதாம்.. இருப்பினும் பெண் அதிகாரிக்கு எதிராக சமூக இயக்கங்கள் சில போராட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டு உள்ளார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.