Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

13 மாநிலத்தில் 97% வழக்குகள் பதிவு தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை உபி, ராஜஸ்தான், மபியில் அதிகம்: ஒன்றிய அரசு அறிக்கை

புதுடெல்லி: கடந்த 2022ம் ஆண்டில் எஸ்சி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகளில் 97.7 சதவீத வழக்குகள் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் பதிவாகியிருப்பதாக ஒன்றிய அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டில் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகள் தொடர்பான அறிக்கையை ஒன்றிய அரசு சமீபத்தில் வெளியிட்டது.

அதில், எஸ்சி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 51,656 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உபியில் 12,287 வழக்குகளும் (23.78%), ராஜஸ்தானில் 8,651 வழக்குகளும் (16.75%), மத்தியபிரதேசத்தில் 7,732 வழக்குகளும் (14.97%), பீகாரில் 6,799 வழக்குகளும் (13.16%), ஒடிசாவில் 3,576 வழக்குகளும் (6.93%), மகாராஷ்டிராவில் 2,706 வழக்குகளும் (5.24%) பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்த வழக்குகளில் இந்த 6 மாநிலங்களில் மட்டுமே 81% வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 13 மாநிலங்களில் 97.7% வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதே காலகட்டத்தில், எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 9,735 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக மபியில் 2,979 வழக்குகளும் (30.61%), ராஜஸ்தானில் 2,498 வழக்குகளும் (25.66%), ஒடிசாவில் 773 வழக்குகளும் (7.94%) பதிவாகி உள்ளன. மொத்த வழக்குகளில் 98.91 சதவீத வழக்குகள் 13 மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. எஸ்சி தொடர்பான 60.38 சதவீத வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 14.78 சதவீத வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன.

17,166 வழக்குகள் நிலுவையில் உள்ளன. எஸ்டி தொடர்பான 63.32 சதவீத வழக்குகளில் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 14.71 சதவீத வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன. 2,702 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தச் சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளில் தண்டனை விகிதம் தொடர்ந்து சரிந்து வருவது கவலைக்குரிய விஷயமாக உள்ளது. 2020ல் 39.2 சதவீதமாக இருந்த தண்டனை விகிதம் 2022ல் 32.4 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும், இச்சட்டத்தின் கீழ் வழக்குகளை நடத்துவதற்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றங்கள் போதிய எண்ணிக்கையில் இல்லை என்றும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.