நீட் வினாத்தாள் கசிவு போராட்ட விவகாரம்; மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: அரசியலமைப்பின் 142வது பிரிவை பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் அதிரடி
புதுடெல்லி: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக டெல்லியில் கரப்பான் பூச்சி இயக்கத்தின் சார்பாக மாணவர்கள் தரப்பில் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால் இதனை கட்டுப்படுத்தும் விதமாக போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், அதேப்போன்று ரப்பர் குண்டு துப்பாக்கியால் சுட்டும் போராட்டக்காரர்களை கலைத்தனர். இதேப்போன்று போராட்டம் நாடு முழுவதும் நடந்தது. குறிப்பாக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நடவடிக்கைக்கு எதிராக அனைத்து தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தது.
இந்த நிலையில் போராட்டத்தின் போது மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தையும் முன்னதாக விசாரித்த உச்ச நீதிமன்றம், அமைதியான முறையில் போராடுவதற்கான உரிமை முழுமையாக உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என்றும், காவல்துறை வரம்பு மீறிய செயல்களை நியாயப்படுத்த முடியாது எனவும் தெரிவித்திருந்தது.
குறிப்பாக டெல்லி போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் மாணவர்கள் உட்பட கடுமையான குற்றப்பின்னணி இல்லாதவர்கள் மீதான எப்.ஐ.ஆர்களை முடித்து வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து தனக்கான உட்சபட்ச அதிகாரமான அரசியலமைப்பின் 142வது பிரிவை பயன்படுத்தி உச்ச நீதிமன்றமே போராட்டகாரர்களின் எப்.ஐ.ஆர்களை முடித்து வைக்க வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் ஒரு அவசர கோரிக்கை மனு நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்ஷி மற்றும் வி.மோகனா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது பிறப்பித்த உத்தரவில், ‘‘டெல்லி, பீகார், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் ஜூலை 20 முதல் 25 வரை நடைபெற்ற போராட்டங்கள் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர்கள் அனைத்தும், உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரமான அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142வது பிரிவை பயன்படுத்தி ரத்து செய்யப்படுகிறது.
பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவு செய்யப்பட்ட இதேப்போன்ற எப்.ஐ.ஆர்கள் மீதும் மேற்கொண்டு எந்த விசாரணையும் நடத்தக் கூடாது. ஜூலை 20 முதல் 25ம் தேதி வரையில் போராட்டங்கள் தொடர்பாக புதிய எப்.ஐ.ஆர்களைப் பதிவு செய்யவும் தடை விதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் தேசிய குற்ற ஆவண காப்பக தரவுகள்படி டெல்லியில் படுகாயம் ஏற்படுத்துதல் மற்றும் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துதல் போன்ற தீவிர குற்றங்களில் ஈடுபட்ட 2,873 நபர்கள் மீது மட்டும் டெல்லி காவல்துறை புதிய எப்.ஐ.ஆர் பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது. இதில் குறிப்பாக நீட் 2026ம் ஆண்டு தேர்வு தொடர்பாக தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அகில இந்திய அளவிலான கொள்கையை மத்திய அரசு மூன்று மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும். மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து உருவாக்கப்படும் இந்த கொள்கையின் கீழ் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘மாணவர் போராட்டங்கள் மீதான வழக்குகளைப் பின் தொடரப்போவதில்லை என்ற உறுதிமொழியை கண்டிப்பாக அரசு நிறைவேற்றும். அதில் எந்தவித மாற்றமும் கிடையாது. இருப்பினும் இழப்பீட்டு தொகை தொடர்பான கொள்கையை உருவாக்க மூன்று மாதங்கள் தேவை என தெரிவித்தார். இதையடுத்து கரப்பான் பூச்சி ஜனதா இயக்கத்தின் தரப்பில் ஆஜரான அக்கட்சியின் இணை ஒருங்கினைப்பாளர் சவுரவ் தாஸ், ‘‘இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தற்போது பிறப்பித்துள்ள உத்தரவு மற்றும் மத்திய அரசின் உறுதிமொழி ஆகியவற்றை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். எனவே அதனை அடிப்படையாக கொண்டு வரும் 5ம் தேதி டெல்லியில் நடத்தத் திட்டமிட்டிருந்த அமைதி பேரணியை திரும்பப் பெருகிறோம் என்று தெரிவித்தார்.
இதையடுத்து வாதங்கள் அனைத்தையும் பதிவு செய்து கொண்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த், ‘‘இந்த விவகாரத்தில் இரு தரப்பின் இந்த இணக்கமான முடிவை நாங்கள் வரவேற்கிறோம். இரண்டு தரப்பினரும் ஒரு அதீத நன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் எந்தவொரு சிக்கலாக இருந்தாலும், எந்த பிரச்சனைக்கும் தீர்வு காண முடியும். இந்த உத்தரவை வருங்கால வழக்குகளுக்கான முன்மாதிரியாக பயன்படுத்த முடியாது என்று கூறினர்.
5ம்தேதி நடக்கவிருந்த பேரணி ரத்து அபிஜித் அறிவிப்பு
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே செய்தியாளர்களிடம் பேசுகையில்,‘‘ உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுவிட்டன. இதுதான் முழுமையான நீதி. இதற்கு எங்களுக்கு ஒரு மாதம் பிடித்தது. மக்கள் சக்தியாலேயே இந்த முடிவு சாத்தியமாகியுள்ளது என்றார். தற்கொலை செய்துகொண்ட மாணவர்களை குறிப்பிட்டு, எங்களால் உங்கள் பிள்ளைகளை காப்பாற்ற முடியவில்லை என்பதற்காக அவர்களது குடும்பத்தினரிடம் நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். டெல்லியில் வரும் 5ம் தேதி நடத்தத் திட்டமிட்டிருந்த பேரணி ரத்து செய்யப்படுகிறது’’ என்றார்.
இளைஞர் நலனே அரசின் தலையாய முன்னுரிமை: ஜே.பி.நட்டா
ஒன்றிய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா கூறுகையில்,டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் சார்பில் நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்றவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து எப்ஐஆர்-களும் திரும்பப் பெறப்படும் என்றும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது என்றார். மேலும், நாட்டின் இளைஞர்களின் நலனும் முன்னேற்றமுமே அரசின் தலையாய முன்னுரிமையாக தொடர்கிறது என்று அவர் கூறினார்.



