டெல்லி: இந்தியாவில் உள்ள சிறைகளில் நிலவும் சாதி மற்றும் இதர பாகுபாடுகள் குறித்த வழக்கில், பதிலளிக்காத மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றி பதில் அளிக்காத மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது.
கடந்த 2024ம் ஆண்டு அக்டோபரில், உச்ச நீதிமன்றம் சிறை விதிகளில் சாதி வாரியாக வேலைகள் பிரிக்கப்படுவதையும், கைதிகளைத் தனித்தனியாகப் பிரித்து வைப்பதையும் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என அறிவித்துத் தடை விதித்தது. இந்த பாகுபாடுகளை ஒழிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாநிலங்கள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்ற சுயமாக முன்வந்து எடுக்கப்பட்ட வழக்கின் தொடர்ச்சியாகவே தற்போதைய கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
இந்த வழக்கில், கடந்த ஜூலை மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் அனைத்து மாநில அரசுகளும் மற்றும் யூனியன் பிரதேசங்களும் குறிப்பிட்ட அந்தந்த மாவட்ட முதன்மை நீதிபதியின் தலைமையில் மாவட்ட வாரியாக பார்வையாளர்கள் குழுவை நான்கு வார காலத்திற்குள் அமைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில் பல மாநிலங்கள் இந்த விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்பதை உச்சநீதிமன்றத்திற்க்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். இதையடுத்ததுதான் உச்சநீதிமன்றம், பதிலக்காத மாநிலங்களுக்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
மேலும், சிறைகளில் நிலவும் சாதி மற்றும் இதர பாகுபாடுகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்ய 4 வாரங்களுக்குள் நீதிபதி தலைமையிலான குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்காத மாநிலங்கள், இறுதி வாய்ப்பையும் பயன்படுத்தத் தவறினால் அந்தந்த மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்


