நெல்லை: களக்காடு தனியார் மருத்துவமனையில் பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசு டாக்டர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம், களக்காட்டை சேர்ந்தவர் டாக்டர் நசீர் (45). இவர் கூடங்குளம் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனையில் டாக்டராக உள்ளார். அத்துடன் தனது தந்தை டாக்டர் முகைதீன் களக்காட்டில் நடத்தி வரும் மருத்துவமனையையும் கவனித்து வருகிறார். இந்த மருத்துவமனையில் களக்காடு அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் கேஷியராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு கேஷியரான இளம்பெண் மருத்துவமனையில் உள்ள மாடி அறைக்கு சென்று அங்கிருந்த டாக்டர் நசீரிடம் கணக்குகளை ஒப்படைத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென டாக்டர் நசீர், அந்த பெண்ணின் கன்னத்தில் முத்தமிட்டு, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் கதறி அழுதபடி அங்கிருந்து ஓடி வெளியேறினார். இதுகுறித்த புகாரின் பேரில் களக்காடு போலீசார், அரசு டாக்டர் நசீர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
