Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாரத் தர பரிசோதனையில் தரச்சான்று பெற்ற கார்கள்

நடப்பு ஆண்டுக்கான மாடல்களில்

பாரத் புதிய கார் மதிப்பீட்டு திட்டம், 2023 அக்டோபர் 1 முதல் இந்தியாவில் நடைமுறைக்கு வந்தது. ஏஐஎஸ் 197 தரநிலையின்படி, வாகனங்களின் பாதுகாப்பு செயல் திறனுக்கு ஏற்ப பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு, தரக்குறியீடு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 3.5 டன்களுக்கு மிகாத எம்1 வகை பயணிகள் கார்களுக்கு விபத்து பாதுகாப்பு சோதனை நடத்தப்படுகிறது. பெரியவர்கள் பாதுகாப்பை பொறுத்தவரை, விபத்துகளில் பாதிப்பை குறைக்க சீட் பெல்ட் மற்றும் ஏர்பேக்குகளின் செயல் திறன் பரிசோதிக்கப்படுகிறது. குழந்தைகள் பாதுகாப்பை பொருத்தவரை இருக்கைகள், பூஸ்டர் இருக்கைகளின் பயன்பாடு மூலம் உறுதி செய்யப்படுகிறது. இதுவிர, தானியங்கி பிரேக்கிங் போன்ற தொழில் நுட்ப அம்சங்களும் சோதிக்கப்படுகின்றன. பாரத் புதிய கார் மதிப்பீட்டு திட்டம் 2.0 அடுத்த ஆண்டு அக்டோபர் முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதில் கூடுதலாக அடாஸ் தேவைகள்,அதிவேக மற்றும் பக்கவாட்டு விபத்து சோதனைகள் போன்ற கடுமையான சோதனைகள் நடைமுறைக்கு வர இருக்கின்றன. இதனிடையே, பாரத் புதிய கார் மதிப்பீட்டு திட்டத்தில் இதுவரை 27 கார்கள் மட்டுதே சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதிகபட்ச பாதுகாப்பு அம்சத்துக்கு 5 ஸ்டார்கள் தரக்குறியீடாக வழங்கப்படுகிறது.

டாடா பஞ்ச் பேஸ்லிப்ட்

இந்த ஆண்டில் கடந்த ஜனவரி மாதத்தில் டாடா பஞ்ச் பேஸ்லிப்ட் கார் பாரத் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பெரியவர்களுக்கான பாதுகாப்பு சோதனையில் 32க்கு 30.58 புள்ளிகளை பெற்றுள்ளது. டிரைவர் மற்றும் முன்புற பயணிகளுக்கு தலை மற்றும் கழுத்து பகுதிக்கு சிறந்த பாதுகாப்பு வழங்குவதாக கண்டறியப்பட்டள்ளது. இதுபோல் தொடை, காலின் கீழ் பகுதிகளுக்கும் சிறந்த பகாதுகாப்பு வழங்குகிறது. இதுபோல் பக்கவாட்டு விபத்து சோதனையில் 16க்கு 15.87 புள்ளிகள் பெற்றுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பை பொருத்தவரை 49க்கு 45 புள்ளிகள் பெற்றுள்ளது. இந்த காரில் ஸ்டாண்டர்டு அம்சமாக 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிடி கண்ட்ரோல், ரியர் பார்க்கிங் சென்சார்கள், 360 டிகிரி கேமரா, டயரில் காற்று அழுத்தத்தை அளவிடும் வசதி உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

வின்பாஸ்ட்

வின்பாஸ்ட் நிறுவனம் விஎப்6 மற்றும் விஎப் 7 ஆகிய எலெக்ட்ரிக் கார்களை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார்கள் தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது. கடந்த ஜனவரியில் இந்த கார்களுக்கு பாரத் தர பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் வின்பாஸ்ட் விஎப் 6 மற்றும் விஎப்7 ஆகிய கார்கள் 5 ஸ்டார் பாதுகாப்பு சான்றினை பெற்றுள்ளன. விஎப்6 காரை பொறுத்தவரை பெரியவர்களுக்கான தர பரிசோதனையில் 32க்கு 27.13 புள்ளிகள் பெற்றுள்ளது. குழந்தைகளுக்கான பாதுகாப்பு சோதனையில் 49க்கு 44.41 புள்ளிகளை பெற்றுள்ளது. இதுபோல் பக்கவாட்டு விபத்து சோதனையிலும் பெரியவர்களுக்கு 16க்கு 16 என முழு மதிப்பெண்களையும் குழந்தைகளுக்கு 8க்கு 8 புள்ளிகளையும் பெற்றுள்ளது. இதுபோல், கார் பக்கவாட்டில் கம்பத்தில் மோதும்போது பயணிகளுக்கு எவ்வாறு பாதிப்பு ஏற்படுகிறது என்ற பரிசோதனையிலும் விஎப்6 109 புள்ளிகளும், பிஎப்7 131 புள்ளிகளும் பெற்றுள்ளன. இந்த இரண்டு கார்களிலும் 7 ஏர்பேக்குகள், தானியங்கி அவசரகால பிரேக்கிங், விபத்தை தடுக்கும் தொழில்நுட்பம், அடாப்டிவ் குரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட ஸ்மார்ட் அடாஸ் பாதுகாப்பு அம்சங்கள் இவற்றில் இடம் பெற்றுள்ளன.

மாருதி சுசூகி இ விட்டாரா

மாருதி நிறுவனத்தின் மற்றொரு காரான இ-விட்டாராவின் 2026 மாடல் கார் தர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதில் பெரியவர்களுக்கான பாதுகாப்பு அம்சத்தில் 32க்கு 31.49 புள்ளிகள் பெற்றுள்ளது. குழந்தைகள், சிறுவர்களுக்கான பாதுகாப்பு அம்சத்தில் 49க்கு 43 புள்ளிகளை பெற்றுள்ளது. முன்பற மோதல் பரிசோதனையில் 16க்கு 15.49 புள்ளிகளும், பக்கவாட்டு விபத்து பரிசோதனையில் 16க்கு 16 புள்ளிகளும் பெற்று 5 ஸ்டார் பாதுகாப்பு சான்றினை பெற்றிருக்கிறது. இந்த காரில் ஸ்டாண்டர்டு அம்சமாக 7 ஏர்பேக்குகள், லெவல் 2 அடாஸ், ஏபிஎஸ், 360 டிகிரி கேமரா உள்ளிட்ட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

மாருதி டிசையர்

மாருதி நிறுவனத்தின் இந்த ஆண்டு டிசையர் மாடல் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பு அம்சத்தில் 32க்கு 29.46 புள்ளிகளை பெற்றுள்ளது. சிறுவர்களுக்கான பாதகாப்பு சோதனையில் 49க்கு 41.57 புள்ளிகள் பெற்றுள்ளது. முன்புற மோதல், பக்கவாட்டு மோதல், தலை, கழுத்து, மார்பு, கால் பகுதி உள்ளிட்டவற்றின் பாதுகாப்பை அளவிடும் பரிசோதனைகள் இதில் அடங்கும். இந்த காரின் அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டு அம்சமாக இடம் பெற்றுள்ளன. ஏபிஎஸ், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், ரியர் பார்க்கிங் சென்சார்கள், 3 பாயிண்ட் சீட் பெல்ட் ஆகிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

டாடா சியரா

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சியரா கார் சமீபத்தில் பாரத் கார் மதிப்பீட்டு திட்டத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. இது முழுமையாக 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. பெரியவர்களுக்கான பாதுகாப்பு சோதனையில் 32க்கு 31.14 புள்ளிகள் பெற்றுள்ளது. முன்புற மோதலில் பயணிகள் பாதுகாப்பு தொடர்பான சோதனையில் 16க்கு 15.14 புள்ளிகளை பெற்றுள்ளது. பக்கவாட்டு பாதுகாப்பு சோதனையிலும் வெற்றி பெற்றுள்ளது. சிறுவர்கள் குழந்தைகளுக்கான பாதுகாப்புசோதனையில் 49க்கு 44.73 புள்ளிகள் பெற்றுள்ளது. இந்தக் காரில் ஸ்டாண்டர்டு அம்சமாக 6 ஏர்பேக்குகள் இடம் றெப்றுள்ளன. லெவல் டூ அடாஸ் , 360 டிகிரி எச்டி கேமரா, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிடி கண்ட்ரோல், ஆட்டோ ஹோல்டு, டயர் அழுத்தத்தை கண்காணிக்கும் அமைப்பு போன்றவை இடம் பெற்றுள்ளன.