கஞ்சா போதையில் வந்த இளைஞர்கள் வெறிச்செயல் 2 வாலிபர்கள் வெட்டி படுகொ*ல: காஞ்சி அருகே கோயில் திருவிழாவில் பயங்கரம்
சென்னை: காஞ்சிபுரம் அருகே கோயில் திருவிழாவில் கஞ்சா போதையில் வந்த சிலர் திடீரென தகராறில் ஈடுபட்டு, சுவாமிக்கு அலங்காரம் செய்த 2 வாலிபர்களை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பினர். இது, பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், படுநெல்லி கிராமத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில், ஆடி மாதத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு திருவிழா நடத்த ஊர் மக்கள் முடிவு செய்து, நேற்று முன்தினம் காலை விமரிசையாக தொடங்கியது. விழாவை முன்னிட்டு, கோயில் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. முன்னதாக கிராம தேவதையான பொன்னியம்மன் கோயிலுக்கு பொங்கல் வைக்கும் வைபவம் நடந்தது. அப்போது, இரு பிரிவினரிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. ஊர் பெரியவர்கள் சேர்ந்து, தகராறை விலக்கி விட்டுள்ளனர். எனவே, அனைவரும் கலைந்து சென்றனர்.
பொன்னியம்மன் கோயில் வைபவம் முடிந்ததும், அனைவரும் மாரியம்மன் கோயிலுக்கு வந்தனர். அங்கு, அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டது. விரதம் இருந்த பக்தர்கள், மாலையில் குளக்கரையில் இருந்து கரகம் எடுத்து கோயிலுக்கு வந்தனர். பின்னர், இரவில் சுவாமி வீதியுலாவுடன் கரக ஊர்வலமும் நடந்தது. ஊர் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் என 500க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர். அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கஞ்சா போதையில் அங்கு வந்து சுவாமிக்கு அலங்காரம் செய்துகொண்டிருந்த இரண்டு வாலிபர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டபோது ஊர் பெரியவர்கள் தலையிட்டு சமரசம் செய்ய முயன்றனர்.
இதற்கிடையில், அசம்பாவிதம் ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அந்த இளைஞர்கள், அங்கிருந்து சென்று விட்டனர். சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த இளைஞர்கள் அதீத போதையில் அங்கு வந்து தகராறு செய்துள்ளனர். மீண்டும் வாக்குவாதம் முற்றியதில் அடிதடி ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சுவாமிக்கு அலங்காரம் செய்துகொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சந்துரு என்ற சந்திரசேகரன் (26), விக்கி (எ) நீலகண்டன் (27) ஆகியோரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர். அவர்களின் முகங்கள் சிதைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த கொலையால் அந்த இடமே பெரும் பதற்றமாக காணப்பட்டது. நாலாபுறமும் பொதுமக்கள் சிதறி ஓடினர். சடலங்களை பார்த்து இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஏராளமான போலீசார், கொலை செய்யப்பட்ட வாலிபர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர். ஆனால் அங்கு கூடியிருந்த பொதுமக்கள், போலீசாரை தடுத்து நிறுத்தி, `உரிய பாதுகாப்பு கொடுக்காததால்தான் இருவர் உயரிழந்துள்ளனர். இதற்கு நீங்கள்தான் (போலீஸ்) காரணம்’ எனக்கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு போலீசார், இரு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி அரவிந்த், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்து, குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். முதல்கட்ட விசாரணையில், கஞ்சா போதையில் ஏற்பட்ட தகராறில் இரட்டை கொலை நடந்ததாக கூறப்படுகிறது. கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த இரட்டை கொலை சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. கோயில் திருவிழாவும் நிறுத்தப்பட்டது.
கிராம மக்கள் சாலை மறியல்
இரட்டை கொலை சம்பவத்தை கண்டித்து படுநெல்லி கிராமத்தை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட மக்கள், காஞ்சிபுரம் - திருத்தணி சாலையில் ஒன்று திரண்டு, குற்றவாளிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து, தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். யாரும் கலைந்து செல்ல மறுத்ததால், அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



