தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் நாளை மறுநாள் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 4,023 பேர் போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவு நாளில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் வி.வி.பேட் இயந்திரங்களில் வேட்பாளரின் பெயர், படம், சின்னம் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் உள்ளனர். 18 முதல் 19 வயதுடைய புதிய வாக்காளர்கள் 14 லட்சத்து 59 ஆயிரத்து 39 பேர் உள்ளனர்.
இந்த தேர்தலில் நான்குமுனை போட்டி நிலவுகிறது. திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடந்த ஒரு மாதமாக சூறாவளி பிரசாரம் செய்து வந்தார். மேலும், இந்த கூட்டணிக்கு ஆதரவாக கூட்டணி கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்தனர். இதுபோன்று அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி மற்றும் தலைவர்கள் பிரசாரம் செய்தனர். இதுபோன்று சீமானும் பிரசாரம் செய்தார். ஆனால் புதிதாக கட்சி தொடங்கிய நடிகர் விஜய், கடந்த மார்ச் 15ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து 36 நாட்களில் சென்னை உள்பட சில நகரங்களில் 10 நாட்கள் மட்டுமே பிரசாரம் செய்தார்.
மற்றபடி ஓய்விலேயே இருந்துள்ளார். ஆனால் பிரசாரம் செய்ய முடியாமல் சதி நடப்பதாக அறிக்கை மட்டும் அவர் வெளியிட்டார். ஒரு கட்சியின் தலைவனாக இருப்பவர், எளிதில் உணர்ச்சி வசப்படாதவராக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் நேர்மை, உண்மையை கடைப்பிடிப்பவராக இருக்க வேண்டும். கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தில் இருந்து முற்றும் முரணான அவரது அறிக்கைகளும், பரப்புரையும், தமிழக அரசை குறை கூறும் நோக்கத்தில் இருந்து வருகிறது.
டெல்லி அணிக்கும், தமிழ்நாடு அணிக்கும் போட்டி, தொகுதி மறுவரையறை தொடர்பான விவகாரத்தில் பேரறிஞர் அண்ணாவின் புகழ்பெற்ற வாசகமான ‘‘தீ பரவட்டும்” என்பது உள்பட முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய பல பேச்சுகள் அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுபோன்று மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எடப்பாடி பழனிச்சாமி, முதல்வர், அமைச்சர்கள் மற்றும் பலர் மீது தனிப்பட்ட தாக்குதல் பேச்சை தொடர்ந்தார். சீமான் வழக்கமான பரப்புரையை தொடர்ந்தார். தமிழ்நாட்டின் தேர்தல், கொள்கை யுத்தமாகும். கொள்கை யுத்தத்தில் ஒருபுறம் ஸ்டாலின் தலைமையிலான அணி, மறுபுறம் அதிமுக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்டோர் அணி. பழைய அதிமுக தற்போது இல்லை. அது அழிந்துவிட்டது.
தமிழ்நாட்டுக்குள் நுழைய பாஜ பயன்படுத்தும் வெறும் கூடுதான் அதிமுக. பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒருபோதும் பணிந்து போகமாட்டார். ஆனால் எடப்பாடி பழனிசாமி மோடி சொல்படியே நடப்பார் என நேற்று வைகுண்டம் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி இறுதிகட்ட பரப்புரையில் காட்டமாக பேசினார். அதிமுக இப்போது பாஜவின் பிடியில் உள்ளது. அதிமுகவை கைப்பற்ற பாஜ விரும்புகிறது. பீகாரில் நிதிஷ்குமாருக்கு ஏற்பட்ட கதிதான் அதிமுகவுக்கும் ஏற்படும் என நேற்று நடந்த இறுதிக்கட்ட பிரசாரத்தில் டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். இருவரது பேச்சும் உண்மை என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இன்று மாலை 6 மணியுடன் அனைத்துக்கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் பிரசாரம் நிறைவு பெறுகிறது.


