இந்திய அரசின் கணக்குகளில் ரூ.54,000 கோடிக்கும் அதிகமான செலவினங்களுக்கான பயன்பாட்டுச் சான்றிதழ்கள் இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவரத்தை நாட்டின் உச்ச தணிக்கை அமைப்பான இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (CAG) தனது சமீபத்திய அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளார்.
பொது நிதி நிர்வாக விதிகளின்படி, ஒன்றிய அரசு ஒதுக்கும் நிதி எந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டது என்பதை உறுதிப்படுத்தும் பயன்பாட்டுச் சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட அமைச்சகங்களும் துறைகளும் கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், 15 ஒன்றிய அரசு அமைச்சகங்கள் மற்றும் துறைகளிடமிருந்து ரூ.54,282 கோடி மதிப்பிலான 33,973 பயன்பாட்டுச் சான்றிதழ்கள் இன்னும் நிலுவையில் உள்ளதாக சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால், அந்த நிதி ஒதுக்கப்பட்ட நோக்கத்திற்காக முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து கடுமையான கேள்விகள் எழுந்துள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2024–25ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் கணக்குகள் தொடர்பான இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளரின் அறிக்கையில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
எனினும், இந்தப் பணம் திருடப்பட்டுவிட்டது அல்லது காணாமல் போய்விட்டது என்று சிஏஜி கூறவில்லை. மாறாக, அரசு வழங்கிய நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதை உறுதிப்படுத்த வேண்டிய அதிகாரப்பூர்வ ஆவணங்களான பயன்பாட்டுச் சான்றிதழ்களே இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை என்பதையே சுட்டிக்காட்டியுள்ளது. அதாவது, செலவினங்களுக்கான கணக்குகள் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பதே தணிக்கையின் முக்கிய கண்டுபிடிப்பாகும்.
இந்த நிலுவைத் தொகையில், நகர்ப்புற வீடமைப்பு அமைச்சகத்தில் சுமார் ரூ.18,000 கோடிக்கும், உயர்கல்வித் துறையில் ரூ.14,000 கோடிக்கும் மேற்பட்ட பயன்பாட்டுச் சான்றிதழ்கள் நிலுவையில் உள்ளதாக சிஏஜி தெரிவித்துள்ளது.
மேலும், சில வழக்குகள் 1985–86ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருப்பது கவலைக்குரியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு அப்பாற்பட்டு, ரூ.12,754 கோடி அளவிலான தவறான கணக்குப் பதிவு, ரூ.922 கோடி செஸ் மற்றும் வரி நிதி உரிய கணக்குகளுக்கு மாற்றப்படாதது உள்ளிட்ட பல்வேறு நிதி முறைகேடுகள் மற்றும் நிர்வாகக் குறைபாடுகளையும் சிஏஜி சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த அறிக்கை தற்போது அரசியல் வட்டாரத்தில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு புறம், எதிர்க்கட்சிகள் ஒன்றிய அரசின் நிதி வெளிப்படைத்தன்மையை கேள்விக்குள்ளாக்கி வருகின்றன. மறுபுறம், பயன்பாட்டுச் சான்றிதழ்கள் நிலுவையில் இருப்பது மட்டுமே நிதி மோசடி நடந்துவிட்டதாக அர்த்தமல்ல; அது நிர்வாக மற்றும் ஆவணப்படுத்தல் தாமதத்தையும் குறிக்கக்கூடும் என்று நிதி நிபுணர்கள் விளக்குகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து ஒன்றிய அரசு விரிவான மற்றும் தெளிவான விளக்கத்தை வெளியிடுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

