Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமைச்சரவையை சினிமாவாக நினைக்கிறார் முதல்வர் விஜய்: கே.பி.முனுசாமி காட்டம்

சென்னை: அமைச்சரவையை சினிமாவாக நினைக்கிறார் முதல்வர் விஜய் என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி; பெரும்பான்மை இல்லாததால் தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. பதவிக்காகவே அதிமுகவில் இருந்து தவெகவுக்கு செல்கிறார்கள். மதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தால் வெற்றி பெற வைப்பதாக முதல்வர் விஜய் குதிரை பேரம். தவெக அரசின் குதிரை பேரம் மீது நடவடிக்கை எடுப்பதற்காகவே ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுக தொண்டன் ஒவ்வொருவரும் ஜாம்பவான்கள். தவெகவில் இணைந்தவர்கள் ஓடுகாலிகள்.அதிமுக தொண்டன், ஆதவ் அர்ஜுனா போல் கொள்கையற்ற தொண்டன் அல்ல.வாய்ப்பு கிடைக்கும் இடங்களுக்கு எல்லாம் ஓடுகாலியாக சென்றவர்தான் ஆதவ் அர்ஜுனா. அதிமுக தவெகவில் இணையும் என்று ஆதவ் அர்ஜுனா மீண்டும் பேசினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். விஜய் ஆட்சியை இழந்தால் ஆதவ் அர்ஜுனா, விஜயபாஸ்கர் வேறு இடத்துக்கு ஓடி விடுவார்கள். ஆதவ் அர்ஜுனாவுக்கும் விஜயபாஸ்கருக்கும் வித்தியாசம் இல்லை. கட்சி மாறி மாறி ஓடி போகும் தலைவர்கள் தான் இவர்கள்.

அதிமுகவின் 2ம் கட்ட தலைவர்கள் பனையூர் கேட்டின் முன்பு நின்று கேட் எப்போது திறக்கும்? என்று ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டு, பட்டியில் இருந்து ஆட்டுக்கூட்டம் ஓடுவது போல, ஓடிச் சென்று பார்க்கும் தலைவர் புஸ்ஸி ஆனந்த்தான். ஏனென்றால், அக்கட்சியின் தலைவரைக் கூட அவர்களால் பார்க்க முடியவில்லை. ஆட்சியில் இருந்து கொண்டு காவல்துறையை ஆதவ் அர்ஜுனா மிரட்டிக் கொண்டிருக்கிறார். சிபிஐ விசாரணையில் உள்ள கரூர் வழக்கை விமர்சிக்க ஆதவ் அர்ஜுனாவுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?

கரூர் வழக்கை நீர்த்து போக செய்ய முயற்சி செய்கிறார்கள். மாத்திரை எனக் கூறி போதைப்பொருளை பயன்படுத்திய அமைச்சர் சரத் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடே தவெக அரசு 5 ஆண்டு நீடிக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. அதிமுகவில் அண்ணாமலையை இணைக்க பேச்சு என்பது அவருக்கு விளம்பரம் தேடும் செயல். அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களாக இருந்து தவெகவுக்கு சென்றவர்களை அக்கட்சி தலைவர் பார்க்கவில்லை. தவெக தொண்டர்கள் இல்லாத கட்சி, ரசிகர் மன்றம் கொண்ட கட்சிதான் தவெக.

புதிய கட்சியின் தோளில் காங்கிரஸ் ஏறியுள்ளது. அதிமுக-திமுக கூட்டணி பேச வேண்டிய அவசியமே இல்லை. சட்டப்பேரவை நடைமுறையை முதல்வர் விஜய்க்கு யாரும் சொல்லித் தரவில்லை. அமைச்சரவையை சினிமா செட் என்பது போல் நினைத்துக் கொண்டிருக்கிறார் விஜய் என்று கூறினார்.