Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அன்பில் மகேஷ் எனது அலுவலகத்தில் இருந்தபோது போலீசார் அத்துமீறி நுழைந்து கைது செய்தனர்: உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் பரபரப்பு வாதம்

சென்னை: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை தனது அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து கைது செய்ததாக சென்னை உயர் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்த மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், தமிழகத்தில் போலீஸ் ராஜ்ஜியம் நடக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். தனியார் பள்ளிகளிடம் 100 கோடி லஞ்சம் வாங்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அன்பில் மகேஷ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், மனுதாரர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சட்டரீதியாக அணுகுவது தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டிருந்த போது, ​​காவல்துறையினர் எனது அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இடமாக எனது அலுவலக முகவரி குறிப்பிடப்பட்டிருந்தது. சுமார் 40 காவல்துறையினர் 3 வேன்களில் வந்தனர். மாடி படிக்கட்டுகளில் வரிசையாக நிறுத்தப்பட்ட போலீசார் எனது அலுவலகத்திற்குள் அரசு வழக்கறிஞருடன் வந்து அன்பில் மகேஷை கைது செய்து கூட்டி சென்றனர்.

மாநிலத்தில் காவல்துறை ராஜ்ஜியம் நடக்கிறதா?. ஒரு வழக்கறிஞரின் அலுவலகத்திற்குள் காவல்துறை நுழைவது தொடர்பாக ஒரு நிலையான செயல்பாட்டு நடைமுறை வகுக்கப்பட வேண்டும் என்று வாதிட்டார். அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் ஜான்சத்யன், காவல்துறையினர் வழக்கறிஞரின் அலுவலகத்திற்கு வெளியே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர். பின்னர் அவர்கள் அலுவலகத்திற்குள் அழைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முத்துக்குமார் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். அன்பில் மகேஷை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

இதைதொடர்ந்து கைது செய்யப்பட்டபோது நடைபெற்ற சம்பவம் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே காரசார வாதம் நடைபெற்றது. இதையடுத்து, முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரிய மனு மீதான விசாரணையை நீதிபதி நவம்பர் 10ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.