Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

இடைத்தேர்தல் நடத்துவது குறித்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 151ஏ என்ன சொல்கிறது? உச்ச நீதிமன்றத்தில் செப். 22ல் விசாரணை

புதுடெல்லி: கடந்த மார்ச் 2023ல் அப்போதைய எம்பி காலமானதால் புனே மக்களவை தொகுதி காலியானதை தொடர்ந்து, அத்தொகுதிக்கு உடனடியாக இடைத்தேர்தல் நடத்துமாறு தேர்தல் ஆணையத்திற்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஒரு தொகுதி மக்கள் நீண்ட காலத்திற்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் இருக்க முடியாது என உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டது. இதை எதிர்த்து தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 151ஏ குறித்து விளக்கம் தேவை’’ என்றார். இச்சட்டப்பிரிவு, காலியான தொகுதிக்குரிய உறுப்பினரின் பதவிக்காலம் ஓராண்டு அல்லது அதற்கு மேல் இருக்கும் பட்சத்தில், அந்த தொகுதி காலியான தேதியிலிருந்து 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் மூலம் நிரப்ப வேண்டுமென தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்துகிறது.

ஆனால் வெவ்வேறு இடைத்தேர்தல்களுக்கு தேர்தல் ஆணையம் பிரிவு 151ஏவை எவ்வாறு வெவ்வேறு விதமாக பொருள் கொள்கிறது என்பது கவலைக்குரிய விஷயம் என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார். இதைக் கேட்ட நீதிபதிகள், 151ஏவின் விளக்கம் குறித்த விவாதங்கள் வரும் செப்டம்பர் 22ம் தேதி முதல் தொடங்கும் என தேதி குறித்து வழக்கை ஒத்திவைத்தனர்.