இடைத்தேர்தல் தோல்வியானது பாஜ மீது மக்களின் அதிருப்தியை பிரதிபலிக்கிறது: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கருத்து
துடெல்லி: இடைத்தேர்தலில் பாஜ தோல்வியடைந்துள்ள நிலையில் இது அக்கட்சியின் மீது மக்கள் சோர்வும் அதிருப்தியும் அடைந்துள்ளதையே காட்டுவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளனர். பீகாரின் பாங்கிபூர் சட்டப்பேரவைத் தொகுதியானது நிதின் நபின் ராஜினாமா செய்ததால் காலியானது. இந்த தொகுதியானது 1995ம் ஆண்டு முதல் பாஜவின் கோட்டையாக திகழ்ந்து வருகின்றது.
இந்நிலையில் இடைத்தேர்தலில் ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் இந்த தொகுதியை கைப்பற்றி பாஜவுக்கு அதிர்ச்சி அளித்தார். 19324 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜவேட்பாளர் நீரஜ் குமாரை வீழ்த்தி பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றார். மத்தியப்பிரதேசத்தின் டட்டியா சட்டப்பேரவை தொகுதியிலும் பாஜ தோல்வியை தழுவியது. இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி,‘‘பாஜ மீது மக்கள் சோர்வும் அதிருப்தியும் அடைந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.
நாட்டில் என்ன நடக்கியது என்பதை அவர்கள் அப்போது புரிந்து கொள்கிறார்கள். இது வெறும் ஆரம்பம் தான்” என்றார். இதேபோல் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத்,‘‘ஜந்தர் மந்தரில் நடந்த மாணவர் போராட்டங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து இளம் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட போலீஸ் நடவடிக்கை, அயோத்தி ராமர் கோயிலில் நடந்த கொள்ளை மற்றும் இந்த விவகாரங்கள் குறித்து பாஜ தலைமை மவுனம் காத்தது ஆகியவை அக்கட்சியின் கோட்டையான பாங்கிபூரில் அதன் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
இந்த இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது” என்றார். பீகாரின் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ், முதல்வர் சாம்ராட் சவுத்ரி முதல்வரான பின்னர் பாஜ இரண்டு தேர்தல்களில் அதவாது எம்எல்சி தேர்தல் மற்றும் பாங்கிபூர் இடைத்தேர்தல் ஆகியவற்றில் தோல்வியடைந்துள்ளது. பீகாரை நிர்வகிப்பதில் முதல்வர் சாம்ராம் முழுமையாக தோல்வியடைந்துவிட்டார். சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது. எதிர்மறை அரசியலே பாஜவின் தோல்விக்கு காரணம்” என்றார்.
* சுயபரிசீலனை செய்யப்படும்
பாஜ தலைவர் நிதின் நபின் தனது எக்ஸ் தள பதிவில், பீகார் மற்றும் மத்தியப்பிரதேசம், குஜராத்தில் நடந்த 3 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் கிடைத்த தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இரண்டு தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் குறித்து முழுமையான தீவிரத்தன்மையுடன் விரிவான சுயபரிசீலனை செய்வோம். மேலும் மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கு புதிய ஆற்றலுடனும், உறுதியுடனும் அயராது உழைப்போம்” என்று தெரிவித்தார்.


